×

வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் பேஸ்-2, பேஸ்-3 டிசம்பருக்குள் முடிக்க நடவடிக்கை

* 700 சாலைப்பணிகளும் விரைவில் அமைக்கப்படும் * தனி குழு அமைத்து கண்காணிப்பதாக கமிஷனர் தகவல்

வேலூர் : வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் பேஸ் -2, பேஸ்-3 டிசம்பருக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை கண்காணிக்க தனி குழு அமைத்து கண்காணிப்பதாக கமிஷனர் அசோக்குமார் தெரிவித்தார்.வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் சாலைகள், புதிய பஸ்நிலையம், கோட்டை அகழி தூர்வாருதல், மின்விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்ெகாள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதில் ஏற்கனவே பாதாள சாக்கடை திட்டத்தின் பேஸ்-1 பணிகள் முடிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பாதாள சாக்கடை திட்டப்பணிகளில் பேஸ்-2, பேஸ்-3 பணிகள்  சுமார் ₹500 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கொரோனா பாதிப்பு, மழைக்காலம் போன்ற காரணங்களினால் இப்பணிகள் மிகவும் மந்தமாக நடந்து வந்தது. இந்நிலையில் தற்போது மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் வரும் டிசம்பருக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக நாள் ஒன்றிற்கு பாதாள சாக்கடை பைப்லைன் அமைக்கும் பணிகள் 300 மீட்டரில் இருந்து 350 மீட்டர் வரையில் கட்டாயம் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர், உதவி பொறியாளர்கள் உள்ளிட்டோர் இணைந்த தனி குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் கூறுகையில், ‘மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் வரும் டிசம்பருக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு பணிகள் விரைவு படுத்தியுள்ளோம். மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடைபெறும் இடங்களில் மொத்தம் 900 சாலைகள் மேற்கொள்ள வேண்டும். இதில் 200 சாலைப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. சாலைபணிகளும் தினமும் 15 சாலைப்பணிகள் முடிக்க திட்டமிட்டுள்ளோம். அதன்படி இன்று(நேற்று) 15 சாலை பணிகள் முடிக்கப்பட்டது.

அதோடு பாதாள சாக்கடை பணிகளின் போது சேண்பாக்கம், பாகாயம் உள்ளிட்ட இடங்களில் பாறைகள் வருகிறது. எனவே அதனை அனுமதிக்கப்பட்ட அளவில் வெடி ைவத்து தகர்க்க கலெக்டரிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. அப்பணிகளும் விரைவில் மேற்கொண்டு டிசம்பருக்குள் முடிக்கப்படும்.

பாதாள சாக்கடை பாலாற்றை கடக்க பாலம்

சத்துச்சாரி சர்வீஸ் சாலையில் இருந்து சர்க்கார் தோப்பில் அமைக்கப்படும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் வரையில் பாதாள சாக்கடை பைப்லைன்கள் செல்வதற்கு பாலம் அமைக்கப்பட உள்ளது. இந்த பாலம் எப்படி அமைக்க வேண்டும். பாலாற்றில் ராட்சத வெள்ளம் வந்தாலும் அதனை தாக்கு பிடிக்கும் வகையில் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக வேலூர் அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள் திட்ட அறிக்கை தயார் செய்து வருகின்றனர். மேலும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் எவ்வளவு முடிக்கப்பட்டுள்ளது என்று வாரத்தில் செவ்வாய், வியாழன், சனி ஆகிய 3 நாட்கள் ஆய்வு கூட்டம் நடத்தப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Vellore Corporation , Vellore: Steps have been taken to complete Phase-2 and Phase-3 of the Vellore Corporation Smart City project by December.
× RELATED வேலூர் மாநகராட்சியில் நகரை...