×

கோவில்பட்டி சேமியா கம்பெனி உணவு பாதுகாப்பு உரிமம் ரத்து-மாவட்ட நியமன அலுவலர் அதிரடி நடவடிக்கை

கோவில்பட்டி : கோவில்பட்டியில் சுகாதார குறைபாடுகளை நிவர்த்தி செய்யாத சேமியா கம்பெனியின் உணவு பாதுகாப்பு உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார். உணவு  பாதுகாப்புத் துறை ஆணையர் செந்தில்குமார், தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோரது வழிகாட்டுதலின் படி தூத்துக்குடி  மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து  வருகிறது.

கோவில்பட்டியில் உள்ள சேமியா தயாரிப்பு நிறுவனத்தில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர்  மாரியப்பன் மற்றும் கோவில்பட்டி நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர்  ஜோதிபாசு ஆகியோர் ஆய்வு செய்தபோது, சேமியாவை பாதுகாப்பின்றி  திறந்தவெளியில் தரையில் கொட்டி வைத்திருந்தது தெரிய வந்தது. மேலும் பல்வேறு சுகாதார குறைபாடுகள் இருந்ததால் அக்குறைபாடுகளை களைய, உணவு பாதுகாப்பு  மற்றும் தரங்கள் சட்டப்படி, அந்நிறுவனத்திற்கு முன்னேற்ற அறிவிப்பு  வழங்கப்பட்டது. மேலும், இந்நிறுவனத்திற்கு எதிராக ஒரு வழக்கில் அபராதம்  விதிக்கப்பட்டும், அதனை செலுத்தாமல் இழுத்தடித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் வரையறுக்கப்பட்ட கால அளவிற்கு பிறகும் சுகாதாரக் குறைபாடுகளை நிவர்த்தி  செய்யாமல் நிறுவனத்தை தொடர்ந்து நடத்தியதாலும், விதிக்கப்பட்ட அபராதத்தை  கட்டாததால், அந்நிறுவனத்தின் உணவு  பாதுகாப்பு உரிமத்தினை தற்காலிகமாக ரத்து செய்து, உரிமம் வழங்கும் அலுவலரான  நியமன அலுவலர் உத்தரவிட்டார். இதன்படி இதற்கான உத்தரவை கோவில்பட்டி உணவு பாதுகாப்பு அலுவலர் கொடுக்க சென்றபோது அந்நிறுவனத்தினர் பெற்றுக் கொள்ளாததால், போலீசார் முன்னிலையில் நிறுவனத்தின் கேட்டில் உத்தரவு ஒட்டப்பட்டது.

அந்நிறுனத்தின்  உணவு பாதுகாப்பு உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதால், மறுஉத்தரவு  பிறப்பிக்கப்படும் வரை, அந்நிறுவனத்தின் தயாரிப்புகளை வணிகர்கள் யாரும்  வாங்கி விற்பனை செய்ய வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள்  சுகாதாரமற்ற உணவகங்கள் குறித்தோ அல்லது தரமற்ற உணவுகள் குறித்தோ புகார்  அளிக்க விரும்பினால், 94440 42322 என்ற மாநில வாட்ஸ்அப் புகார் எண்ணிற்கு  அனுப்பலாம். புகாரைப் பெற்றுக்கொண்ட அடுத்த 48 மணி நேரத்திற்குள் உரிய  நடவடிக்கை எடுத்து அறிக்கை அளிக்கப்படும். மேலும், புகார் அளிப்பவரது  விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று நியமன அலுவலர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

Tags : Kovilpatti Samiya Company ,District Appointment , Kovilpatti: The food safety license of Samiya Company, which does not address health deficiencies in Kovilpatti
× RELATED இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு...