×

வழக்கறிஞர் சங்கரசுப்புவின் மகன் இறப்பு தற்கொலையே: உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ பிரமாணப் பத்திரம் தாக்கல்

புதுடெல்லி: ‘வழக்கறிஞர் சங்கரசுப்புவின் மகனின் இறப்புக்கு தற்கொலைதான் காரணம்,’ என சிபிஐ தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை, அண்ணா நகர், மேற்கு தங்கம் காலனியைச் சேர்ந்தவர் சங்கரசுப்பு. சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர். இவரது மகன் சதீஷ் குமார் (24). இவர் கடந்த 2011  ஜூலை 13ம் தேதி சென்னை ஐ.சி.எப் வடக்கு காலனி ஏரியில் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, வழக்கு சிபிசிஐடி வசம் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், சங்கரசுப்பு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை தமிழக சிபிசிஐடி போலீசார் விசாரிக்க எந்த தடையும் இல்லை என்றும், விசாரனை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என கடந்த மார்ச் 7ம் தேதி உத்தரவிட்டது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் புதிய பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:வழக்கறிஞர் சங்கரசுப்புவின் மகன் சதீஷ் குமார் தற்கொலை தான் செய்து கொண்டுள்ளார். அவர் கொலை செய்யப்பட்டார் அல்லது அவரது மரணம் தொடர்பாக மர்மம் உள்ளது என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் கிடையாது. மேலும், மருத்துவ அறிக்கையிலும், நிபுணர்களின் கருத்து, சாட்சிகளிடம் விசாரணை நடத்தியதன் அடிப்படையில் சதீஷ்குமார் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அவர் சட்டம் படித்திருந்தாலும் அந்த பணியின் மீது நாட்டம் இல்லை.

மாறாக பி.பி.ஓவில் பணி புரிய வேண்டும் என்பதே விருப்பமாக இருந்துள்ளது. இதனால், அவர் சாதாரண மனநிலையில் இல்லை. அவருக்கு ஏற்கனவே ‘எலக்ட்ரோ கன்குளூசிவ் தெரபி,’ என்ற சிகிச்சை கூட வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சதீஷ்குமார் தனது தாய், மூத்த சகோதரர் ஆகியோருடன் கூட சுமூக உறவில் இல்லை. போதை பழக்கமும் அவருக்கு இருந்துள்ளது. சிபிஐ.யை பொருத்தவரை சதீஷ் குமாரின் மரணம் தொடர்பாக அனைத்து வகையிலும் விசாரணை மேற்கொண்டுள்ளது. மேலும், இந்த விசாரணையில் சதீஷ்குமார் மரணத்தில் காவல் துறையினருக்கு தொடர்பு உள்ளது என்ற எந்த ஆதாரமும் கிடையாது. மனுதாரரின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்பதால் அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Sankarasuppu ,CBI ,Supreme Court , Lawyer Sankarasuppu's son commits suicide: CBI files affidavit in Supreme Court
× RELATED மேற்குவங்கத்தில் ஆசிரியர் நியமனத்தை...