×

ஆண்டிபட்டி அருகே டயர் வெடித்ததால் விபரீதம் கோழிப்பண்ணைக்குள் புகுந்தது பஸ்: 20 பயணிகள் காயம்; 50 கோழிகள் சாவு

ஆண்டிபட்டி: மதுரையில் இருந்து தேனியை நோக்கி நேற்று அதிகாலை 3 மணியளவில் தனியார் பஸ் பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே டி.பொம்மிநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அருகே பஸ் சென்றபோது, திடீரென பஸ்ஸின் முன்புற டயர் வெடித்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த பஸ் அருகில் இருந்த கோழிப்பண்ணைக்குள் புகுந்தது. இதில் பஸ்சில் பயணித்த உத்தமபாளையம் அருகே காமாட்சிபுரத்தை சேர்ந்த ரஞ்சித்குமார் (24), குன்னூரை சேர்ந்த மகாலிங்கம் (52), வெள்ளைச்சாமி (39), சிவக்குமார் (46) ஆகிய 4 பேர் படுகாயமடைந்தனர்.

மேலும் பஸ் டிரைவரான மதுரை மாவட்டம், கல்லுப்பட்டியை சேர்ந்த பாண்டியராஜன் (27) மற்றும் பயணிகள் 14 பேர் லேசான காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்தில் சிவகங்கையை சேர்ந்த ரமேஷ் (43) என்பவர் பலத்த காயமடைந்து மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.மேலும் பஸ் கோழிப்பண்ணைக்குள் நுழைந்ததால் பண்ணையின் மேற்கூரை சேதமடைந்து 50க்கும் மேற்பட்ட கோழிகள் இறந்தன. 30க்கும் மேற்பட்ட கோழிகள் காயமடைந்தன. விபத்து குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பஸ் டயர் வெடித்து 20 பேர் காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Antipati Bus , Tire explodes near Andipatti bus plunges into poultry farm: 20 passengers injured; Death of 50 chickens
× RELATED உ.பி. சட்டப்பேரவை இடைத்தேர்தலில்...