×

போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீசிய 4 பேர் கைது

கடலூர்: கடலூர் அருகே தனியார் கம்பெனியில் திருட்டை தடுக்க முயன்ற போலீசார் மற்றும் காவலாளிகள் மீது பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த புதுச்சத்திரம் அருகே உள்ள பெரியகுப்பம் கிராமத்தில் தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை உள்ளது. இந்த ஆலை செயல்பாட்டுக்கு வருவதற்கு முன்பே இயக்கம் நிறுத்தப்பட்டு மூடப்பட்டது. தற்போது இந்த ஆலையில் உள்ள இரும்பு பொருட்கள் தொடர்ந்து திருடுபோய் வருகிறது. கும்பலாக பைக்குகளில் வரும் சிலர் தொழிற்சாலைக்குள் புகுந்து அங்குள்ள இரும்பு பொருட்களை திருடிச்செல்வது வாடிக்கையாக நடந்து வந்தது. குறைந்த அளவே உள்ள காவலாளிகளால் இந்த திருட்டு சம்பவத்தை தடுக்க முடியவில்லை. இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலை இரும்பு திருடுவதற்காக கம்பெனிக்குள் நுழைந்த 20 பேர் கொண்ட ஒரு கும்பல், திருட்டை தடுக்க வந்த காவலாளிகள் மற்றும் போலீசார் மீது எதிர்பாராதவிதமாக பெட்ரோல் குண்டுகளை வீசி எறிந்து தப்பிவிட்டனர்.  இதில் 4 குண்டுகள் வெடித்து சிதறியது. 2 குண்டுகள் வெடிக்கவில்லை. இதுசம்பந்தமாக தனியார் ஆலை பாதுகாப்பு அதிகாரி கண்ணன் அளித்த புகாரின் பேரில் புதுச்சத்திரம் போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். வெடிக்காத பெட்ரோல் குண்டுகளும் கைப்பற்றப்பட்டு ஆய்வுக்கு எடுத்துச்செல்லப்பட்டன.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக இன்று அதிகாலை புதுச்சத்திரம் போலீசார் 4 பேரை கைது செய்தனர். சித்திரைப்பேட்டை ஜெகதீசன் (47), நற்குணன் (50), புதுக்குப்பம் விஜய் (25), குள்ளஞ்சாவடி  பிரபாகரன் (22) ஆகிய 4 பேரையும் கைது செய்து புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Police, petrol bomb, 4 people, arrested
× RELATED பெண்களை ஆபாசமாக பேசிய தகராறில் 12 பேரை...