×

தென்காசி அருகே சொத்து பிரச்னையில் கூலிப்படையை ஏவி தந்தையை கொலை செய்த மகள், மருமகன் உள்பட 4பேர் கைது

தென்காசி : தென்காசியை அடுத்த இலஞ்சியில் சொத்து பிரச்னையில் கூலிப்படையை ஏவி தந்தையை கொலை செய்த மகள், மருமகன் உள்பட 4பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். தென்காசியை அடுத்த இலஞ்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோட்டைமாடன் (82). இவர் கடந்த 4ம் தேதி தனக்கு சொந்தமான தோப்பில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து அவரது 2வது மகள் சந்திரா புகாரின் பேரில் குற்றாலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக போலீசார் கொலை செய்யப்பட்ட கோட்டைமாடனின் 3வது மகள் தேவி காளி செல்வம் (40), மூத்த மகளின் கணவரான பரமசிவன் (57), கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த வசந்தகுமார் (43).  இலஞ்சியைச் சேர்ந்த மகேஷ்  (24) ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் இலஞ்சியைச் சேர்ந்த சேகர் என்பவரை தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது: கொலையான கோட்டைமாடனுக்கு 3 மகள்கள் உள்ளனர்.

மூத்த மகள் மைதீன்பாத் பரமசிவன், இரண்டாவது மகள் சந்திரா, மூன்றாவது மகள் தேவி. கோட்டை மாடன் இரண்டாவது மகள் சந்திராவுடன் வசித்து வந்தார். கோட்டை மாடனுக்கு 1.82 ஏக்கரில் தோப்பு சொந்தமாக உள்ளது இந்த தோப்பில் மூன்றில் இரண்டு பகுதியை தனது 2வது மகள் சந்திராவின் மகன் விஜயக்குமார் பெயரில் எழுதி வைத்துள்ளார். இதற்கு தேவி மற்றும் மூத்த மகளின் கணவர் பரமசிவம் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். எனினும் உடன்பாடு ஏற்படவில்லை.

இதனால் மூன்றாவது மகள்  தேவி மற்றும் மூத்த மகளின் கணவர் பரமசிவம் ஆகியோர் கோட்டைமாடனை கொலை செய்ய திட்டமிட்டனர்.
பரமசிவனின் வீட்டில் வேலை செய்து வரும் லோடு ஆட்டோ டிரைவரான சேகர் என்பவரை தொடர்பு கொண்டு பேசியபோது கூலிப்படையை வைத்து கொலை செய்து விடலாம் என்று திட்டம் தீட்டியுள்ளனர். இது தொடர்பாக கல்லிடைக்குறிச்சி யைச் சேர்ந்த வசந்தகுமார், மகேஷ் ஆகிய இருவரிடமும் ஒரு லட்ச ரூபாய் கூலியாக பேசி 15,000 ரூபாய் முன்பணமாக கொடுத்துள்ளனர். வசந்தகுமார், மகேஷ் இருவரும் கூலிப்படையாக செயல்பட்டு கோட்டைமாடனை கொலை செய்ய முயற்சித்துள்ளனர். இரண்டுமுறை முயற்சித்த போதும் சூழ்நிலை சரியாக இல்லாத காரணத்தால்  தோல்வியில் முடிந்துள்ளது.

இந்நிலையில் கோட்டைமாடனிடம் தோப்பில் உள்ள மரத்தை விலைபேசி வாங்குவது போன்று நடித்து வசந்தகுமார், மகேஷ், சேகர் ஆகிய மூவரும் அவரை தோப்பிற்கு வரவழைத்துள்ளனர்.
தோப்பில் மரத்தை வெட்டுவது போன்று பாசாங்கு செய்து கோட்டைமாடன் எதிர்பாராத தருணத்தில் அவரை கம்பால் கழுத்தில் அடித்து கொலை செய்துள்ளனர். வாயிலிருந்து ரத்தம் வரும் என்பதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. தடயம் இல்லாமல் இயற்கையாக இறந்தது போன்று காண்பிப்பதற்காக கம்பால் தாக்கியுள்ளனர். வாயிலிருந்து ரத்தம் வழிந்ததால் கொலை என்பது வெட்டவெளிச்சமாக தெரிந்துவிட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக அந்த பகுதியில் பதிவான சிசிடிவி காமிரா மற்றும் செல்போன் அழைப்புகள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டது. இதில் 5 பேரும் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்தது. மூன்றாவது மகள் மூத்த மருமகன் மற்றும் கூலிப்படையாக செயல்பட்ட இருவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒருவரை தேடி வருகிறோம். கூலிப்படையினர்
மீதி பணத்தை பெறுவதற்காக இலஞ்சி வந்தபோது கைது செய்யப்பட்டனர். இவ்வாறு போலீசார் கூறினர்.சொத்து பிரச்னையில் பெற்ற மகள் மற்றும் மற்றொரு மகளின் கணவர் ஆகியோர் முதியவரை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பரமசிவத்தின் மனைவி மைதீன்பாத் இலஞ்சி பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவியும் அதிமுக பிரமுகரும் ஆவார்.


Tags : Tenkasi , Tenkasi: Police have arrested four people, including a daughter-in-law and a son-in-law, who killed a mercenary father in a property dispute in Tenkasi.
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...