×

அசானி புயல் எதிரொலி: தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!மே 14 வரை மிதமான மழை நீடிக்கும்..!

சென்னை: அசானி புயல் எதிரொலியாக தமிழ்நாட்டில் இன்று காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நாளை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது. மே 12 முதல் 14 வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை நீடிக்கும். சென்னையில் அடுத்த்ட்ட 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். மேலும் அவ்வப்போது இடி, மின்னலுடன் மழை விட்டு விட்டு பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அசானி தீவிர புயல் தற்போது மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் காக்கிநாடாவிற்கு தென்கிழக்கே சுமார் 260 கி.மீ. தொலைவிலும், மாசிலிப்பட்டினத்திற்கு தெற்க்கே சுமார் 200 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இது கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10கி.மீ. வேகத்தில் நகர்ந்துள்ளதாக வானிலை ஆய்வுமைய இயக்குனர் தெரிவித்துள்ளார். இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து இன்றிரவு ஆந்திர கடற்கரைக்கு அருகில் வந்து பின்னர் வடகிழக்கு திசையில் நகர்ந்து செல்ல கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக மீனவர்கள் 10 மற்றும் 11-ம் தேதி மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கும், 11, 12-ம் தேதிகளில் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, திருப்பத்தூர் மாவட்டம் வடபுதுபட்டு ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

அடுத்துவரும் 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் தமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும், சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சிலப்பகுதிகளில் அவ்வப்போது லேசானது முதல் மிதமான மழைபெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Tags : Asani ,Tamil Nadu , Asani storm, heavy rain, moderate rain, Meteorological Center
× RELATED சதுப்பு நிலங்களை அடையாளம் காணும்...