ஆக்கிரமிப்பு வீடுகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த பாமக நிர்வாகி மருத்துவமனையில் பலி: ராஜா அண்ணாமலைபுரத்தில் போலீஸ் குவிப்பு

சென்னை: ராஜா அண்ணாமலைபுரத்தில் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த பாமக நிர்வாகி ஒருவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதையடுத்து அசம்பாவிதங்களை தடுக்க அப்பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கோவிந்தசாமி நகர் இளங்கோவன் தெருவில் நீர்நிலைப் பகுதியை ஆக்கிரமிப்பு செய்துள்ள வீடுகளை கடந்த 29ம் தேதி முதல் நீதிமன்ற உத்தரவுப்படி பொதுப்பணித்துறை அதிகாரிகள் இயந்திரங்கள் மூலம் அப்புறப்படுத்தி வருகின்றனர். ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள குடும்பத்தினருக்கு பெரும்பாக்கம் பகுதியில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் அப்பகுதி மக்கள் தங்களுக்கு இந்த பகுதியிலேயே இடம் வேண்டும் என்று பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் வீடுகளை இடிக்க இயந்திரங்களுடன் வந்தனர். அப்போது அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது, அதே பகுதியில் 30 ஆண்டுகளாக வசித்து வரும் பாமக தென் சென்னை கிழக்கு மாவட்ட துணை செயலாளராக உள்ள வி.ஜி.கண்ணையன் (57) என்பவர் யாரும் எதிர்பார்க்காத நிலையில் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத பொதுமக்கள் தீ பிடித்து எரிந்த கண்ணையனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் போலீசாருக்கு எதிராக அப்பகுதி மக்கள் வன்முறையில் ஈடுபட முயன்றனர்.ஆனால் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து அப்பகுதி மக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதற்கிடையே கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 90 விழுக்காடு காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த பாமக நிர்வாகி கண்ணையன் நேற்று முன்தினம் நள்ளிரவு உயிரிழந்தார். இந்த தகவல் ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் பரவியதால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. அதைதொடர்ந்து, எந்தவித அசம்பாவிதங்களும் நடக்காமல் தடுக்கும் வகையில் உதவி கமிஷனர்கள் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: