×

ரூ.1.50 கோடி கடன் வழங்குவதில் பிரச்னை அதிமுகவை சேர்ந்த தலைவர் இயக்குநர்களிடையே கடும் மோதல்: கூட்டுறவு வங்கி நிர்வாக குழுவில் பரபரப்பு

விழுப்புரம்: விழுப்புரம் கூட்டுறவு நகர வங்கியில் ரூ.1.5 கோடி கடன் வழங்குவதில் அதிமுக தலைவர், இயக்குநர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் கூட்டுறவு நகர வங்கியின் நிர்வாகக்குழு கூட்டம் தலைவர் தங்கசேகர் தலைமையில் நடந்தது. இயக்குநர்கள் தனுசு, கலைச்செல்வன், செந்தில் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில், கடன் கேட்டு விண்ணப்பித்த பயனாளிகளுக்கு ரூ.1.50 கோடி வழங்குவது உள்ளிட்ட தீர்மானம் கொண்டுவரப்பட்டது. கூட்டம் தொடங்கிய நிலையில், அதிமுகவை சேர்ந்த தலைவர் தங்கசேகர், அதிகாரிகள் யாரும் தன்னை மதிப்பதில்லை என்று கூறி வெளிநடப்பு செய்தார். அதேசமயம், தலைவருக்கு எதிராக அதிமுகவை சேர்ந்த 7 இயக்குநர்கள் அந்த தீர்மானத்தில் கையெழுத்திட்டு நிறைவேற்றினர். பெரும்பான்மையான இயக்குநர்கள் கையெழுத்திட்டதால் தீர்மானம் நிறைவேறிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பொதுமக்களுக்கு ஓரிருநாளில் கடன் வழங்கப்படும் என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிர்வாகக்குழுவில் உள்ள அனைவரும் அதிமுகவை சேர்ந்தவர்கள்தான். ஆனால், தலைவர் வெளிநடப்பு செய்த நிலையில், அதைமீறி இயக்குநர்கள் நிர்வாகக்குழு கூட்டத்தை நடத்தி முடித்த சம்பவம் வங்கி மட்டுமின்றி, அதிமுக கட்சி வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, அதிமுகவை சேர்ந்த இயக்குநர்கள் கூறுகையில், தமிழக அரசின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. அதிகாரிகளும் முழு ஒத்துழைப்புடன் செயல்பட்டு மக்களுக்கு பணியாற்றி வருகிறார்கள். திட்டமிட்டு அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கில் செயல்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எக்காரணம் கொண்டும் மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதால் தலைவர் வெளிநடப்பையும் மீறி தீர்மானத்தை நிறைவேற்றியதாக தெரிவித்தனர்.

Tags : Chairman of the Directors of the General Assembly ,Cooperative Bank Executive Committee , Rs 1.50 crore, debt, AIADMK, severe conflict
× RELATED நகர கூட்டுறவு வங்கி நிர்வாகக்குழு கூட்டம்