×

கழிவுகள் கொட்டும் இடமாக மாறும் புளியம்பட்டி கிராமம்-கண்டுகொள்ளாத ஊராட்சி நிர்வாகத்தினர்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே உள்ள புளியம்பட்டி கிராமத்தில் பல்வேறு இடங்களில் கழிவுகள் கொட்டப்படுவதை, ஊராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாமல் இருப்பதாக பொதுமக்கள் வேதனையடைந்துள்ளனர். பொள்ளாச்சி நகராட்சியை தொட்டுள்ள ஊராட்சியில், ஒன்றான புளியம்பட்டி ஊராட்சி வழியாகவே பல்லடம் ரோடு செல்கிறது. இந்த ரோடு வழியாக பகல் மற்றும் இரவு நேரத்தில் வாகன போக்குவரத்து உள்ளது. சுமார் 3ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட இந்த ஊராட்சியின் பெரும்பகுதியில் தற்போது கழிவுகள் கொட்டப்படும் அவலம் தொடர்கிறது.

 ஊராட்சியிலிருந்து பிரிந்து அனுப்பர்பாளைம் செல்லும் ரோட்டோரம் ஆங்காங்கே, இரவு நேரத்தில் கனரக வாகனங்களில் கொண்டுவரப்படும் மருத்துவ கழிவுகள், தொழிற்சாலை கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகள் கொட்டப்படுகிறது.  பல ஆண்டுகளாக கழிவுகள் கொட்டும் இடமாக புளியம்பட்டி ஊராட்சி கிராமம் உள்ளது. பல்வேறு கழிவுகளால், சுகாதாரம் சீர்கேடு உண்டாவதுடன், நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதால், கழிவுகளை கொட்டுவதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அதிமுக ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி நிர்வாகத்திடம் கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

ஆனால், ஊராட்சி நிர்வாகத்தினரோ அதனை கண்டுகொள்ளாமல், கழிவுகள் கொட்டி செல்வபவர்களுக்கு உறுதுணையாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஊராட்சிக்குட்பட்ட குடியிருப்புகளில் துப்புரவு பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளையும், ஊராட்சி நிர்வாகம் முறையாக பிரித்தெடுத்து கொட்ட அதற்கான இடம் ஒதுக்கி தரவில்லை.

மயானம் செல்லும் ரோட்டோரம் மட்டுமின்றி, கள்ளிபாளையம் புதூர் செல்லும் பாதையில் உள்ள பொதுக்கழிப்பிடம் அருகேயும் என பல இடங்களில் குப்பை கழிவுகளை கொட்டி தேக்கி வைக்கப்பட்டுள்ளது. சிலநேரத்தில் குப்பையை தீ வைத்து எரிக்கும்போது வெளியேறும் நக்சுபுகையால் மக்கள் அவதிப்படுகின்றனர்.  

எனவே, குடியிருப்பு அருகே உள்ள சாலைகளில், வெளியே இருந்து கனரக வாகங்களில் கொண்டுவரப்படும் கழிவு பொருட்களை கொட்டி செல்வதை தடுக்கவும், குப்பைகளை கொட்டி சுகாதார சீர்கேடு விளைவிக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என, அக்கிராமத்தை சேர்ந்த பலரும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Puliyampatti , Pollachi: Panchayat administration finds waste being dumped at various places in Puliyampatti village near Pollachi.
× RELATED தக்காளி கிரேடு ₹400க்கு விற்பனை