×

டு பிளெஸ்ஸி, கார்த்திக், ஹசரங்கா அமர்க்களம் ஐதராபாத் அணிக்கு எதிராக ஆர்சிபி அபார வெற்றி

மும்பை: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 67 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. வாங்கடே மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில் (பகல்/இரவு), டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்களாக கோஹ்லி, கேப்டன் டு பிளெஸ்ஸி களமிறங்கினர். சுசித் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே வில்லியம்சனிடம் கேட்ச் கொடுத்த கோஹ்லி, நடப்பு தொடரில் 3வது முறையாக ‘கோல்டன் டக்’ அவுட்டாகி ஏமாற்றத்துடன் வெளியேறினார்.

அடுத்து டு பிளெஸ்ஸியுடன் ரஜத் பத்திதார் இணைந்தார். பொறுப்புடன் விளையாடிய இருவரும் 2வது விக்கெட்டுக்கு 105 ரன் சேர்த்தனர். ரஜத் 48 ரன் (38 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி சுசித் பந்துவீச்சில் திரிபாதி வசம் பிடிபட்டார். டு பிளெஸ்ஸி 34 பந்தில் அரை சதம் அடிக்க, மேக்ஸ்வெல் 33 ரன் (24 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி கார்த்திக் தியாகி பந்துவீச்சில் மார்க்ரம் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பரூக்கி வீசிய கடைசி ஓவரில் தினேஷ் கார்த்திக் ஹாட்ரிக் சிக்சர்களைப் பறக்கவிட்டு மிரட்ட, பெங்களூர் அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 192 ரன் குவித்தது. டு பிளெஸ்ஸி 73 ரன் (50 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்), தினேஷ் கார்த்திக் 30 ரன்னுடன் (8 பந்து, 1 பவுண்டரி, 4 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஐதராபாத் பந்துவீச்சில் சுசித் 2, தியாகி 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 20 ஓவரில் 193 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஐதராபாத் களமிறங்கியது. அபிஷேக் ஷர்மா, கேப்டன் கேன் வில்லியம்சன் இருவரும் துரத்தலை தொடங்கினர். மேக்ஸ்வெல் வீசிய முதல் பந்திலேயே வில்லியம்சன் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டாகி வெளியேற, 5வது பந்தில் அபிஷேக்கும் டக் அவுட்டானது ஐதராபாத் அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. இந்நிலையில், திரிபாதி - மார்க்ரம் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 50 ரன் சேர்த்தனர். மார்க்ரம் 21 ரன், நிகோலஸ் பூரன் 19 ரன், சுசித் 2 ரன் எடுத்து டி சில்வா பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தனர். பொறுப்புடன் விளையாடி அரை சதம் அடித்த திரிபாதி 58 ரன் (37 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ஹேசல்வுட் வேகத்தில் லோம்ரர் வசம் பிடிபட்டார்.

அடுத்து வந்த கார்த்திக் தியாகி கோல்டன் டக் அவுட்டாக, ஷஷாங்க் (8), உம்ரான் மாலிக் (0) அடுத்தடுத்து ஆட்டமிழந்து அணிவகுத்தனர். 114 ரன்னுக்கு 5 விக்கெட் என்ற நிலையில் இருந்து, 114 ரன்னுக்கு 9 விக்கெட் என திடீர் சரிவை சந்தித்த ஐதராபாத் தோல்வியின் பிடியில் சிக்கியது. புவனேஷ்வர் 8 ரன் எடுத்து ஹர்ஷல் பந்துவீச்சில் டு பிளெஸ்ஸி வசம் பிடிபட, ஐதராபாத் 19.2 ஓவரில் 125 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பரூக்கி 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆர்சிபி பந்துவீச்சில் ஹசரங்கா டி சில்வா 4 ஓவரில் 1 மெய்டன் உள்பட 18 ரன்னுக்கு 5 விக்கெட் கைப்பற்றி ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். ஹேசல்வுட் 2, மேக்ஸ்வெல், ஹர்ஷல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். ஆர்சிபி 2 புள்ளிகள் பெற்றது.

Tags : Du Plessis ,Karthik ,Hasaranga Amarkalam ,RCB ,Hyderabad , Du Plessis, Karthik, Hasaranga Amarkalam RCB win over Hyderabad
× RELATED அரசாணை விதிகளை பின்பற்றி மணல் விற்பனை...