×

மயிலை ஆடிட்டர் தம்பதியை கடத்தி கொலை செய்த விவகாரம் நில விற்பனை மூலம் கிடைத்த ரூ.40 கோடியை கொள்ளையடிப்பதற்காக திட்டமிட்டு கொன்றோம்

* கொலை பின்னணி குறித்து குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம்
* 9 கிலோ தங்கம், 70 கிலோ வெள்ளி, செல்போன்கள், லேப்டாப் பறிமுதல்

சென்னை: நிலம் விற்பனை மூலம் கிடைத்த ரூ.40 கோடியை கொள்ளைடியடிக்கும் நோக்கில், அமெரிக்காவில் இருந்து திரும்பிய மயிலை ஆடிட்டர் தம்பதியை கடத்தி அடித்து கொலை செய்தோம் என்று நேபாளத்தை சேர்ந்த கார் ஓட்டுனர் மற்றும் அவரது நண்பர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.5 கோடி மதிப்புள்ள 9 கிலோ தங்கம், வைர நகைகள், 70 கிலோ வெள்ளி பொருட்கள், விலை உயர்ந்த செல்போன்கள், லேப்டாப்புகள், கார் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை மயிலாப்பூர், பிருந்தாவன் கார்டன் பதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (60). ஆடிட்டரான இவர், ஐடி நிறுவனம் நடத்தி வந்தார். இவருக்கு அனுராதா(55) என்ற மனைவி, மகள் சுனந்தா, மகன் சஸ்வத் ஆகியோர் உள்ளனர்.  மகன் மற்றும் மகள் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். ஸ்ரீகாந்த் தனது மனைவியுடன் மயிலாப்பூரில் வசித்து வந்தார். ஸ்ரீகாந்த் வீட்டில் நேபாளத்தை சேர்ந்த பதம்லால் கிஷன்(எ)கிருஷ்ணா(45) என்பவர் கார் டிரைவராக வீட்டுடன் தங்கி உள்ளார்.

அமெரிக்காவில் வசித்து வரும் மகள் சுனந்தா பிரசவத்திற்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஸ்ரீகாந்த் தனது மனைவி அனுராதா உடன் அமெரிக்கா சென்று விட்டார். இதற்கிடையே அமெரிக்காவில் இருந்து நேற்று முன்தினம் அதிகாலை 3.30 மணிக்கு விமானம் முலம் ஸ்ரீகாந்த் தனது மனைவியுடன் சென்னை வந்தார். ஆடிட்டர் தம்பதியை அழைத்து வர அவரது வீட்டில் தங்கி வேலை செய்து வரும் கிருஷ்ணா காரில் சென்று இருந்தார். அப்போது அமெரிக்காவில் உள்ள மகன் சஸ்வத், தந்தைக்கு போன் செய்துள்ளார். அதற்கு ஆடிட்டர் ‘எங்களை அழைத்து செல்ல  டிரைவர் கிருஷ்ணா வந்துள்ளார்’  என கூறியுள்ளார். பிறகு வீட்டிற்கு சென்றதும் போன் செய்யுங்கள் என அவரது மகன் கூறி உள்ளார்.

அதைதொடர்ந்து நேற்று முன்தினம் காலை 8.30 மணி அளவில் ஆடிட்டர் மகன் பேசினார். ஆனால்  தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் ரமேஷ் என்பவரை தந்தை வீட்டிற்கு சென்று பார்க்க சொன்னார். அவர் வந்து பார்த்தபோது, வீடு பூட்டப்பட்டிருந்தது. இதுகுறித்து ரமேஷ் சஸ்வத்திற்கு தகவல் கொடுத்தார். அவர், எனது பெற்றோர் காலையிலேயே சென்னை வந்துவிட்டனர். நீங்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பாருங்கள்  என்று கூறியுள்ளார். அதன்படி ரமேஷ் சம்பவம் குறித்து மயிலாப்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் போலீசார் உதவியுடன் ஸ்ரீகாந்த் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அமெரிக்காவில் இருந்து கொண்டு வந்த சூட்கேஸ் திறக்கப்பட்ட நிலையிலும், வீட்டில் உள்ள லாக்கரில் இருந்த தங்க நகைகள் மாயமாகி இருந்ததும் தெரியவந்தது. மேலும், வீட்டில் உள்ள காரையும்  டிரைவர் கிருஷ்ணாவையும் காணவில்லை.

 இதனால் சந்தேகமடைந்த மயிலாப்பூர் குற்றப்பிரிவு போலீசார் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் வீடு முழுவதும் சோதனை செய்தனர். அதில், வீட்டில் ரத்த கறைகள் படிந்து இருந்ததை கண்டுபிடித்தனர். பின்னர் நகை, பணத்திற்காக ஆடிட்டர் மற்றும் அவரது மனைவியை அடித்து காயப்படுத்தி கடத்தி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். இதற்கிடையே ஆடிட்டர் தம்பதி கடத்தப்பட்டதாக தகவல் அறிந்த சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தெற்கு மண்டல கூடுதல் கமிஷனர் கண்ணன் மேற்பார்வையில் இணை கமிஷனர் பிரபாகரன், துணை கமிஷனர் திஷாமிட்டல் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

அதன்படி தனிப்படை போலீசார் செல்போன் சிக்னல் உதவியுடன் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தினர். அதில், கார் டிரைவர் கிருஷ்ணா பயன்படுத்தும் செல்போன் மாமல்லபுரம் நெமிலிச்சேரி அடுத்த சூளேரிக்காடு பகுதியில் உள்ள ஆடிட்டர் பண்ணை வீடு பிறகு ஆந்திராவில் இருப்பதாக சிக்னல் காட்டியது. பிறகு சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் கண்காணித்த போது, கார் டிரைவர் கிருஷ்ணா ஆந்திரா மாநிலம் ஓங்கோல் சுங்கச்சாவடி வழியாக செல்வது தெரியவந்தது. உடனே தனிப்படை போலீசார் ஓங்கோல் போலீசார் உதவியுடன் அந்த சுங்கச்சாவடியில் காரை மடக்கினர். காரை சோதனை செய்தபோது, தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், உருட்டுக்கட்டை கத்திகள் இருந்தது. உடனே காரை ஓட்டி வந்த டிரைவர் கிருஷ்ணா மற்றும் அவரது நண்பரைஓங்கோல் போலீசார் பிடித்து தமிழக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

உடனே ஓங்கோல் பகுதிக்கு உதவி கமிஷனர் குமரகுருபரன் தலைமையிலான தனிப்படை சென்று டிரைவர் கிருஷ்ணா, அவரது நண்பர் ரவி ராய் மற்றும் கார், தங்க நகைகளுடன் நேற்று நள்ளிரவு சென்னை திரும்பினர். அவர்களிடம் இருந்து 9 கிலோ தங்க நகைகள், வைர நகைகள், பிளாட்டினம் நகைகள், 70 கிலோ வெள்ளி பொருட்கள், அமெரிக்காவில் இருந்து கொண்டுவந்த விலை உயர்ந்த ஐபோன்கள், லேப்டாப்புகள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னைக்கு அழைத்து வரப்பட்ட நேபாளத்தை சேர்ந்த கார் டிரைவர் கிருஷ்ணா மற்றும் அவரது நண்பர் ரவி ராயிடம் விசாரணை நடத்திய போது, நிலம் விற்பனை மூலம் ஆடிட்டரிடம் கைமாறிய ரூ.40 கோடி பணத்திற்காக ஆடிட்டர் தம்பதியை கொடூரமாக அடித்து கொலை செய்து அவரது பண்ணை வீட்டில் புதைத்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

ஆடிட்டரை கொலை செய்தது குறித்து நேபாளம் நாட்டை சேர்ந்த கார் டிரைவர் கிருஷ்ணா மற்றும் அவரது நண்பர் ரவி ராய் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது: நேபாளம் பீர்பா மாவட்டம் நாராயண்பூர் கிராமத்தை சேர்ந்தவர் லால் சர்மா(70). இவர் தனது மனைவியுடன், ஆடிட்டர் ஸ்ரீகாந்த்தின் நெமிலிச்சேரி அருகே உள்ள சூளேரிக்காடு பண்ணை வீடடில் கடந்த 20 ஆண்டுகளாக செக்யூரிட்டியாக வேலை செய்து வருகிறார். இந்த பழக்கத்தில் தனது மகன் பதம்லால் கிஷன்(எ) கிருஷ்ணாவை ஸ்ரீகாந்தின் கார் டிரைவராக சேர்த்துள்ளார்.  அதன்படி கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆடிட்டர் ஸ்ரீகாந்த் வீட்டின் பின்புறம் உள்ள அறையில் தங்கி கார் ஓட்டி வந்தார்.

கிருஷ்ணா 20 ஆண்டுகளாக சென்னையில் இருந்ததால் தமிழ் பெண்ணை திருமணம் செய்து பிரிந்துவிட்டார். அவருக்கு 15 வயதில் மகன் உள்ளான்.  மகன் மட்டும் மேற்குவங்கம் டார்ஜிலிங் பகுதியை சேர்ந்த தனது நண்பர் ரவி ராய்(39) கட்டுப்பாட்டில் டார்ஜிலிங்கில் உள்ள ஒரு பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வருகிறார். ஆடிட்டர் தனது மகள் பிரசவத்திற்காக கடந்த நவம்பர் மாதம் தனது மனைவியுடன் அமெரிக்கா சென்றார். அப்போது, ஸ்ரீகாந்த் நாங்கள் வர சில மாதங்கள் ஆகலாம். அதனால் வீடு மற்றும் காரை பார்த்து கொள்ளும்படி கூறியுள்ளார்.  

இதையடுத்து டார்ஜிலிங் பகுதியில் வசித்து வரும் தனது நண்பர் ரவி ராயை சென்னைக்கு அழைத்து ரூ.40 கோடி பணம் குறித்து பேசி தனது திட்டம் குறித்து கூறியுள்ளார். அதை கேட்டு ரவி ராய் ஆடிட்டர் தம்பதியை கொலை செய்து பணத்துடன் செட்டில் ஆகிவிடலாம் என்று கூறியுள்ளார்.. அந்த திட்டத்தின்படி கிருஷ்ணா தனது தந்தை லால் சர்மாவை கடந்த 20 நாட்களுக்கு முன்பு நேபாளத்திற்கு அனுப்பிவிட்டார். இதனால் ஆடிட்டரின் பண்ணை வீட்டின் சாவியும் கிருஷ்ணாவின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது.

இதற்கிடையே ஆடிட்டர் தனது மனைவியுடன் அமெரிக்காவில் இருந்து நேற்று முன்தினம் அதிகாலை சென்னை வருவதாக டிரைவர் கிருஷ்ணாவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  திட்டமிட்டப்படி ஆடிட்டர்தம்பதியை கொலை செய்து பண்ணை வீட்டில் புதைக்க பண்ணை வீட்டில் பள்ளம் தோண்டி வைத்திருந்தனர். ரவிராய் மயிலாப்பூர் வீட்டில் கிருஷ்ணா தங்கி இருந்த அறையில் உருட்டுக்கட்டையுடன் பதுங்கி இருந்தார். பின்னர் திட்டமிட்டப்படி நேற்று முன்தினம் அதிகாலை 3.30 மணிக்கு கிருஷ்ணா சென்னை விமான நிலையத்தில் இருந்து ஆடிட்டர் மற்றும் அவரது மனைவியை கார் மூலம் மயிலாப்பூர் வீட்டிற்கு அழைத்து வந்தார்.

ஆடிட்டர் வீட்டிற்கு வந்ததும் தனது மனைவியுடன் கதவை திறந்து உள்ளே சென்றார். அப்போது காரில் இருந்து கொண்டு வந்த 5 சூட்கேஸ்களை டிரைவர் கிருஷ்ணா வீட்டின் தரைத்தளத்தில் கொண்டு வந்து வைத்தார். பிறகு வீட்டின் பின்புறம் அறையில் பதுங்கி இருந்த ரவி ராய் உதவியுடன் ஆடிட்டர் மற்றும் அவரது மனைவியை கத்தி மற்றும் உருட்டுக்கட்டையால் தலையில் அடித்து ரூ.40 கோடி பணம் குறித்து கேட்டுள்ளனர். இதை சற்றும் எதிர்பார்க்காத ஆடிட்டர் ‘கிருஷ்ணா நீயா இப்படி’ என்று கூறியபடி செல்போனை எடுத்து போலீசுக்கு தகவல் கொடுக்க முயன்றார்.

ஆனால், கிருஷ்ணா கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் உருட்டுக்கட்டையால் கொடூரமாக தாக்கி அனுராதா கண்முன்பே கொடூரமாக ஸ்ரீகாந்த்தை கொலை செய்தார். பிறகு வீட்டின் தரை தளத்தில் இருந்து லாக்கர் உள்ள வீட்டின் முதல் தளத்திற்கு அனுராதாவை கத்தி முனையில் அழைத்து சென்று சாவி மூலம் ஒவ்வொரு லாக்கரை திறக்க சொல்லி ரூ.40 கோடி பணத்தை எடுக்க பல வகையில் முயன்றனர். ஆனால் அவர்கள் நினைத்தபடி வீட்டில் ரூ.40 கோடி பணம் இல்லை.பின்னர் லாக்கர் திறந்ததும் அனுராதாவை உனது கணவர் இடத்திற்கே நீயும் சென்றுவி்டு என்று கூறி கொடூரமாக அடித்து கொலை செய்தனர். பிறகு லாக்கரில் இருந்து தங்கம், வைரம், வெள்ளி நகைகளை ஒரு பையில் எடுத்துக்கொண்டனர். கொலை செய்யப்பட்ட அனுராதா மற்றும் அவரது கணவர் ஆடிட்டர் ஸ்ரீகாந்த் உடலை தனித்தனியாக போர்வையால் கட்டி ஒரு சாக்கு மூட்டையில் ரத்தம் வெளியே சிந்தாதபடி காரில் ஏற்றினர்.

பின்னர் அந்த இடத்தை ‘ டெட்டால் ஊற்றி சுத்தம் செய்தனர். அதன் பிறகு ஆடிட்டர் தம்பதியின் உடல்கள் மற்றும் நகைகள் அடங்கிய பைகளுடன்  மாமல்லபுரம் அடுத்த நெமிலிச்சேரி அருகே உள்ள சூளேரிக்காடு பண்ணை வீட்டிற்கு வந்தனர். ஏற்கனவே தோண்டப்பட்ட குழியில் ஆடிட்டர் தம்பதியின் உடல்களை தள்ளி மண்ணை போட்டு மூடினர். அனைத்து வேலைகளும்  முடிந்த உடன் இருவரும் தங்களது கையுறைகளை தீ வைத்து எரித்துவிட்டு, காரில் நேபாளம் புறப்பட்டனர். ஆனால் போலீசார் இவர்கள் பயன்படுத்திய செல்போன் மற்றும் காரின் பதிவு எண்கள் மூலம் சுங்கச்சாவடியை கடந்து செல்லும் சிசிடிவு பதிவுகளை வைத்து ஆந்திரா மாநிலம் ஓங்கோல் சுங்கச்சாவடியில் ஆந்திரா போலீசாரிடம் சிக்கி கொண்டனர்.

நாங்கள் நகைகளுக்காக இந்த கொலையை செய்ய வில்லை. ரூ.40 கோடி பணத்தை எடுத்து கொண்டு சொந்த நாட்டில் தலைமறைவாகிவிடலாம் என்று தான் திட்டமிட்டு கொலை செய்தோம். ஆனால் எங்களுக்கு ரூ.40 கோடி பணம் கிடைக்காததது ஏமாற்றம் அளிக்கிறது. இருந்தாலும், கிடைத்த தங்க நகைகள் எங்களுக்கு ஓரளவுக்கு ஆறுதலை தந்தது. ஆனால் நாங்கள் போலீசாரிடம் சிக்கி கொண்டோம்.இவ்வாறு கைது செய்யப்பட்ட கார் டிரைவர் கிருஷ்ணா மற்றும் அவரது நண்பர் ரவிராய் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

* அமெரிக்காவில் உள்ள மகனுக்கு காட்டிக் கொடுத்த சிசிடிவி
ஆடிட்டர் ஸ்ரீகாந்த் தனது மயிலாப்பூர் வீட்டை சுற்றிலும் சிசிடிவி கேமரா பொருத்தியுள்ளார். இதனால் ஆடிட்டர் மகன் சஸ்வத் அமெரிக்காவில் இருந்து தனது வீட்டை கண்காணித்து வந்துள்ளார். அப்படி கண்காணித்தபோது, தான் சென்னை திரும்பிய பெற்றோர் காரில் வீட்டிற்குள் செல்வது பதிவாகி இருந்தது. அதன் பிறகு வீட்டில் உள்ள எந்த சிசிடிவியும் வேலை செய்யவில்லை. இதனால், சந்தேகமடைந்து கார் டிரைவர் கிருஷ்ணாவுக்கு சஸ்வத் போன் செய்துள்ளார். ஆனால் அவர் சரியாக பதில் அளிக்காமல் செல்போனை துண்டித்ததால்தான் சந்தேகம் வலுத்தது. அதன் பிறகு தான் அமெரிக்காவில் உள்ள சஸ்வத் தனது உறவினருக்கு போன் செய்து வீட்டிற்கு அனுப்பியுள்ளார்.

* சிசிடிவி ‘டிவிஆர்’ ஐ திருடி சென்ற குற்றவாளி
அமெரிக்காவில் இருந்து செல்போன் உதவி மூலம் ஆடிட்டர் வீட்டை சிசிடிவி மூலம் கண்காணிப்பார்கள் என்று கார் டிரைவர் கிருஷ்ணாவுக்கு நன்றாக தெரியும். இதனால் ஆடிட்டர் தம்பதியை கொலை செய்த பிறகு, வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் நம்மை எளிதாக பிடித்து விடுவார்கள் என்பதால், சிசிடிவி காட்சிகள் பதிவான ‘டிவிஆர்’ஐ கழற்றி தன்னுடன் கிருஷ்ணா எடுத்து சென்றுள்ளார். அதை போலீசார் பறிமுதல் செய்தனர்.

* புகார் அளித்த 6 மணி நேரத்தில் குற்றவாளிகள் சிக்கியது எப்படி? கூடுதல் ஆணையர் கண்ணன் பேட்டி
சென்னை மாநகர தெற்கு மண்டல கூடுதல் கமிஷனர் கண்ணன் கூறியதாவது: அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய ஆடிட்டர் தம்பதி காரில் கடத்தப்பட்டதாக எங்களுக்கு முதலில் தகவல் கிடைத்தது. நாங்களும் கடத்தல் வழக்காக இருக்கும் என்று தான் நினைத்து விசாரணை தொடங்கினோம். ஆனால், ஆடிட்டரின் மயிலாப்பூர் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, ஆடிட்டர் அமெரிக்காவில் இருந்து கொண்டு வந்த 5 சூட்கேஸில் 2 மட்டும் தான் இருந்தது. 3 சூட்கேஸ் மாயமாகி இருந்தது. வீட்டில் உள்ள லாக்கரும் உடைக்கப்பட்டு இருந்தது.

முதலில் ஆடிட்டர் தம்பதி குறித்து எந்த துப்பும் எங்களுக்கு கிடைக்கவில்லை. புலனாய்பு பிரிவு போலீசார் நடத்திய ஆய்வில் வீட்டில் ரத்த கறைகள் இருந்ததை கண்டுபிடித்தனர். அதை வைத்து தான் நாங்கள் ஆடிட்டர் காரில் கடத்தப்படவில்லை. அவரை வீட்டிற்கு அழைத்து வந்து ஏதோ ஒரு காரணத்திற்காக ரத்த காயம் ஏற்படுத்தி  வேறு இடத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். என்று முடிவு செய்தோம். ஆடிட்டருக்கு மாமல்லபுரம் அருகே பண்ணை வீடு இருப்பதால் அங்கு அழைத்து சென்று இருக்கலாம் என்று முடிவு செய்து அங்கு சென்று பார்த்தோம்.

அப்போது பண்ணை வீடு முழுவதும் சோதனை செய்தோம். பிறகு பண்ணை வீட்டை சுற்றி பார்த்தபோது, புதிதாக பள்ளம் தோண்டப்பட்டிருந்தது தெரியவந்தது. அதன் அருகே செல்போன் மற்றும் கையுறைகள் தீ வைத்து எரிக்கப்பட்டு கிடந்தது. அதன் பிறகு தான் ஆடிட்டர் தம்பதியை மயிலாப்பூர் வீட்டில் கொலை செய்து உடலை பண்ணை வீட்டிற்கு கொண்டு வந்து புதைத்துள்ளனர் என்று உறுதி செய்தோம். அதை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் உள்ள சிசிடிவி பதிவுகளும் உறுதி செய்தது. அதை தொடர்ந்து கார் டிரைவர் கிருஷ்ணா தான் ஆடிட்டர் தம்பதியை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்தது எங்களுக்கு தெரியவந்தது.

பிறகு ஆடிட்டர் கார் பதிவு எண்களை வைத்தும், கிருஷ்ணாவின் செல்போன் சிக்னல் உதவியுடன் விசாரணை நடத்திய போது, கிருஷ்ணா கார் மூலம் செல்வது தெரியவந்தது. உடனே அவர்களின் செல்போன் சிக்னல் உதவியுடன் ஆந்திரா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஓங்கோல் சுங்கச்சாவடியை கடக்க வந்த போது ஆந்திரா போலீசார் காரை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். காரை சோதனை செய்த போது, அதில் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் ஆடிட்டர் தம்பதியை கொலை செய்ய பயன்படுத்திய உருட்டுக்கட்டை, கத்தி் இருந்தது. அவை பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால் அவர்கள் ரூ.40 கோடி பணத்திற்கு தான் ஆடிட்டர் தம்பதியை கொலை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆந்திராவில் குற்றவாளிகளை கைது செய்ய போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர் ஆந்திரா காவல் துறை உயர் அதிகாரிகளிடம் பேசி விரைந்து நடவடிக்கை எடுத்தனர். அதன்படி ஆந்திரா போலீசாரும் துரித நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்தனர். இதற்காக தமிழக காவல் துறை சார்பில் ஆந்திர காவல்துறைக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். தனிப்படை போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்ததினால் தான் புகார் அளித்த 6 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்தோம்.

இல்லை என்றால் குற்றவாளிகள் நேபாளத்துக்கு தப்பி இருப்பார்கள். அவர்கள் நேபாளத்துக்கு தப்பி இருந்தால் அவர்களை கைது செய்ய சில ஆண்டுகள் கூட ஆகியிருக்கும். கைது செய்யப்பட்ட 2 பேரும் நன்றாக தமிழ் பேசுகிறார்கள். இதனால் அவர்களிடம் விசாரணை நடத்துவது எளிமையாக உள்ளது. ஆடிட்டர் தம்பதி கொலை குறித்து அவர்களிடம் விசாரணை நடத்திய பிறகு தான் முழுமையான தகவல்கள் நமக்கு கிடைக்கும். இந்த வழக்கை பொறுத்தமட்டில் போலீசார் விரைவில் விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை பெற்று தரப்படும் என்றார்

* உயிருக்கு உலை வைத்த ரூ.40 கோடி
மார்ச் மாதம் ஆடிட்டர் ஸ்ரீகாந்த் அமெரிக்காவில் இருந்து தனியாக சென்னை வந்தார். அப்போது பல இடங்களுக்கு ஆடிட்டருடன் காரில் செல்லும் போது, நிலம் விற்பனை தொடர்பாக ரூ.40 கோடி பணம் ஆடிட்டர் வாங்கி வீட்டில் வைத்திருப்பதாக பேசியுள்ளார். அதை கேட்ட கிருஷ்ணா ரூ.40 கோடி பணத்தை கொள்ளையடித்து சொந்த நாட்டிற்கு சென்றுவிடலாம் என்று அப்போதே திட்டமிட்டுள்ளார். பிறகு மீண்டும் ஆடிட்டர் ஸ்ரீகாந்த் அமெரிக்காவிற்கு சென்று விட்டார்.

* உடல்கள் தோண்டி எடுப்பு
தனிப்படை போலீசார் கொலையாளிகளான டிரைவர் கிருஷ்ணா மற்றும் அவரது நண்பர் ரவி ராய் ஆகிய இருவரையும் நேற்று மாலை மாமல்லபுரம் அடுத்த சூளேரிக்காட்டில் உள்ள பண்ணை வீட்டுக்கு அழைத்து வந்தனர். அவர்கள் காட்டிய இடத்தில் பொக்லைன் இயந்திரம் மூலம் தோண்டி ஸ்ரீகாந்த் - அனுராதா ஆகிய இருவரின் சடலங்களை வெளியே எடுத்தனர். பின்னர், பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு சடலங்கள் கொண்டு செல்லப்பட்டன. 5 சூட்கேஸ்களை டிரைவர் கிருஷ்ணா வீட்டின் தரைத்தளத்தில் கொண்டு வந்து வைத்தார். பிறகு வீட்டின் பின்புறம் அறையில் பதுங்கி இருந்த ரவி ராய் உதவியுடன் கிருஷ்ணா,  ஆடிட்டர் மற்றும் அவரது மனைவியை கத்தி மற்றும் உருட்டுக்கட்டையால் தலையில் அடித்து ரூ.40 கோடி பணம் குறித்து கேட்டுள்ளனர். இதை சற்றும் எதிர்பார்க்காத ஆடிட்டர் ‘கிருஷ்ணா நீயா இப்படி’ என்று கூறியபடி செல்போனை எடுத்து போலீசுக்கு தகவல் கொடுக்க முயன்றார்.

Tags : Peacock Auditor , Mayilai auditor couple abducted and murdered
× RELATED பெண்களை ஆபாசமாக பேசிய தகராறில் 12 பேரை...