×

பள்ளிப்பட்டு பகுதியில் சூறைக்காற்றுடன் கனமழை: மா விவசாயிகள் மிகுந்த வேதனை

பள்ளிப்பட்டு: திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக வெயில் 100 டிகிரியை தாண்டி இருந்தது. இதனால், சுட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக, பகலில் அனல் காற்றும், இரவில் புழுக்கத்தால் சிறுவர் முதல் முதியவர்கள் வரை கடுமையாக அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில், கோடை வெயிலின் உச்சகட்டமாக கத்திரி வெயில் கொளுத்து வாங்கி வருகிறது. இதனை தொடர்ந்து,  திடீரென நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில், ஆர்கே பேட்டை, பள்ளிப்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை சுமார் ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்தது. இதில், சூறைக்காற்று  வீசியதால், பல்வேறு பகுதிகளில் மரங்கள் சாய்ந்தன. மா செடிகளிலிருந்து மாங்காய் உதிர்ந்ததால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் மிகுந்த வேதனையுடன் கூறினர்.

அம்மையார்குப்பம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள எம்ஜிஆர் சிலை மீது மரக்கிளை உடைந்து விழுந்ததில் எம்ஜிஆர் திருவுருவச்சிலை சேதமடைந்தது‌. மேலும், கோடை வெயில் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், திடீரென்று பெய்த மழைக்கு அனல் காற்று  குறைந்து சில்லென்று காற்று வீசியதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்‌. இந்நிலையில், மரக்கிளை உடைந்து சேதமடைந்த எம்ஜிஆர் திருவுருவ சிலையை அதிமுக மாநில அமைப்பு செயலாளர் திருத்தணி கோ.அரி நிர்வாகிகளுடன் நேரில் சென்று நேற்று பார்வையிட்டார். உடனடியாக புதிய எம்ஜிஆர் சிலை அமைக்கப்படும் என தெரிவித்தார். ஆர்கே பேட்டை ஒன்றிய செயலாளர் நாகபூண்டி கோ.குமார்,  மாவட்ட மாணவர் அணி இணைச் செயலாளர் ஜெயசேகர்பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Pallipattu , Heavy rains with hurricane force winds in Pallipattu area: Mango farmers in great pain
× RELATED பொதட்டூர்பேட்டையில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை