மறைமலைநகர் நகராட்சியில் ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானம் அனைத்து வசதிகளுடன் ரூ.3 கோடியில் நீச்சல் குளம்: சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏ வரலட்சுமி வலியுறுத்தல்

சென்னை: மறைமலைநகர் நகராட்சியில் ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானம், அனைத்து வசதிகளுடன் ரூ.3 கோடியில் நீச்சல் குளம் அமைக்க வேண்டும் என செங்கல்பட்டு திமுக எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் பேசினார்.

சட்டப்பேரவையில் நடந்த கேள்வி நேரத்தின்போது செங்கல்பட்டு தொகுதி எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் (திமுக) பேசுகையில், செங்கல்பட்டு தொகுதி, திம்மாவரம் ஊராட்சியில்  விளையாட்டு திடல் அமைக்க அரசு முன்வருமா? என்றார்.

அதற்கு பதில் அளித்து அமைச்சர் சி.வி, மெய்யநாதன் பேசுகையில், திம்மாவரம் ஊராட்சியில் விளையாட்டு  திடல் தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டு, அதற்கு தேவையான விளையாட்டு  உபகரணங்களும் வழங்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டில் உள்ளது என்றார்.

வரலட்சுமி மதுசூதனன்: செங்கல்பட்டு தொகுதி  காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், திம்மாவரம் ஊராட்சி, மகாலட்சுமி நகரில் 1  ஏக்கரில் விளையாட்டு திடல் அமைக்க இடம் இருக்கிறது. ஆனால், அந்த இடம்  புதர்கள் மண்டி, மழைக்  காலங்களில் அதிகளவு மழைநீர் தேங்கியும், விளையாட்டு திடலை பயன்படுத்த  முடியாத நிலையில் உள்ளது. எனவே, அந்த விளையாட்டு திடலை சரிசெய்து,  சுற்றுச்சுவர் அமைத்து, அப்பகுதியில் உள்ள மாணவ, மாணவிகள், இளைஞர்கள்  பயன்பெறும் விதமாக அனைத்து விளையாட்டுக்களுக்கான வசதிகளை அமைத்து  தர வேண்டும்.

அமைச்சர் மெய்யநாதன்: செங்கல்பட்டு மாவட்டத்தின் வெண்பாக்கம் ஊராட்சியில் உள்ள கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் தமிழக அரசின் புறம்போக்கு நிலத்தில் 9.78  ஏக்கர் இடம் கண்டறியப்பட்டுள்ளது. அந்த இடத்தில் மாவட்ட விளையாட்டு அரங்கம்  அமைப்பதற்கான நடவடிக்கைகள் முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்று, அரசின் பரிசீலனையில் உள்ளது. திம்மாவரம் ஊராட்சி மகாலட்சுமி நகரில் உள்ள அந்த  விளையாட்டு திடலை மேம்படுத்துவதற்கான பணிகள் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று,  நிதிநிலைக்கேற்ப பரிசீலிக்கப்படும்.

வரலட்சுமி மதுசூதனன்: மாவட்ட விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என கூறியதற்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைமலைநகர் நகராட்சியில் ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானம் அமைக்க வரைபடத்துடன் கருத்துரு ஏற்கனவே அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதற்கும் அமைச்சர் ஒப்புதல் வழங்க வேண்டும். அந்த நகராட்சியில் ஒன்றரை ஏக்கர் நிலம் இருக்கிறது. அந்த இடத்தில் சுமார் ரூ.3 கோடியில் அனைத்து வசதிகளுடன் கூடிய நீச்சல் குளம் அமைத்து தரப்படுமா?

அமைச்சர் மெய்யநாதன்: மறைமலைநகர் நகர் பேரூராட்சியில் விளையாட்டு திடல் அமைப்பதற்கும், அந்த நகராட்சியில் உள்ள பகுதியில் நீச்சல் குளம் அமைப்பதற்கும் துறையின் அதிகாரிகளை அனுப்பி, ஆய்வு செய்து, அதற்கு வாய்ப்பிருக்கிறதா என்பதைப் பரிசீலித்து, அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது. 

Related Stories: