×

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 19 தமிழக மீனவர்கள் சென்னை திரும்பினர்

சென்னை: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 19 தமிழக மீனவர்கள் தமிழக முதல்வரின் முயற்சியால் விடுதலை செய்யப்பட்டு, நேற்று காலை விமானம் மூலமாக சென்னை வந்தனர். விமான நிலையத்தில் இலங்கை அரசுக்கு எதிராக கோஷமிட்டு, தங்களை சிறையில் பசி, பட்டினியுடன் வைத்திருந்ததாக மீனவர்கள் குற்றம் சாட்டினர். தமிழகத்தில் ஜெகதாப்பட்டினம், நாகப்பட்டினம் பகுதியை சேர்ந்த 17 மீனவர்கள் கடந்த மாதம் 3ம் தேதி அதிகாலை ராமேஸ்வரம் கடல் பகுதியில் 2 படகுகளில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி இலங்கை கடற்பகுதியில் மீன்பிடித்ததாக கூறி 17 தமிழக மீனவர்களையும் கைது செய்தனர். அவர்களின் 2 படகு, மீன்பிடி வலைகளை பறிமுதல் செய்தனர். பிறகு அனைவரையும் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதை தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட 17 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் மீனவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து பிரதமர் மோடி மற்றும் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி வலியுறுத்தினார். இதையடுத்து இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், சம்பந்தப்பட்ட இலங்கை அதிகாரிகளிடம் பேசி, 17 தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தினர்.

இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்ட 17 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து 17 பேரும் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடந்தது. எனினும், அவர்களுக்கும் பாஸ்போர்ட், விசா இல்லாததால், இந்திய தூதகர அதிகாரிகள் எமர்ஜென்சி சர்டிபிகேட் வழங்கினர். மேலும், கடந்த மாதம் விடுதலையான 2 ராமேஸ்வரம் மீனவர்கள் கொரோனா தொற்றினால் அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

அவர்களையும் சேர்த்து நேற்று முன்தினம் இரவு 19 தமிழக மீனவர்களும் கொழும்பில் இருந்து நேற்று அதிகாலை 4.15 மணியளவில் விமானத்தில் சென்னைக்கு வந்து சேர்ந்தனர். குடியுரிமை அதிகாரிகளின் விசாரணைக்கு பிறகு வெளியே வந்தனர். அப்போது இலங்கை அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். மேலும், தாங்கள் இலங்கை சிறையில் பசி, பட்டினியோடு கிடந்ததாகவும், அங்கு சிறையில் இருக்கும் மேலும் 12 தமிழக மீனவர்களை விடுவிக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். சென்னைக்கு திரும்பிய 19 மீனவர்களையும் தமிழக மீன்வளத் துறை அதிகாரிகள் வரவேற்று அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

Tags : Tamil Nadu ,Chennai , 19 Tamil Nadu fishermen released from Sri Lankan jails return to Chennai
× RELATED விடுதலைப் போராட்டத்தில்...