×

தொல்லியல், அருங்காட்சியகவியல் தொடர்பான 2 ஆண்டு முதுநிலை பட்டயப்படிப்பு: அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

சென்னை: சட்டப்பேரவையில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை  மானியக் கோரிக்கையின் போது தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட  அறிவிப்புகள்:
கலை பண்பாட்டுத் துறை
* பிரமாண்டமான நாட்டுப்புற கலை  விழாவான நம்ம ஊர் திருவிழா சென்னையோடு, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி  மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களிலும் ரூ.6 கோடி மதிப்பீட்டில்  நடத்தப்படும். இந்நிகழ்ச்சிகளில் பங்குபெறும் கலைஞர்கள் மாவட்ட அளவில்  விழாக்கள் நடத்தி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
* தமிழநாடு  டாக்டர் ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக் கழகத்தில் உள்ள  திறந்த வெளி கலையரங்கம் ரூ.1.43 கோடியில் புனரமைக்கப்படும்.
* சென்னை அரசு கவின் கலைக் கல்லூரியின் பாரம்பரிய கட்டடம் மற்றும் இதர கட்டடங்கள் ரூ.7.33 கோடியில் புனரமைக்கப்படும்.
* சென்னை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரரியில் உள்ள பாரம்பரிய கட்டடமான பிராடி  கேசில் ரூ.2.80 கோடியில் மீட்டுருவாக்கம் செய்து புனரமைக்கப்படும்.
* மாமல்லபுரம் அரசினர் கட்டடக் கலை மற்றும் சிற்பக் கலைக் கல்லூரியின் சிற்ப  அருங்காட்சியகம் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டு, மாணவர்களின் சிற்பங்களையும், ஓவியங்களையும் காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் மையம் ஏற்படுத்தப்படும்.
* தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் மூலம் சென்னையிலும், தமிழ்நாட்டின் 10 பிற மாவட்டங்களிலும் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் நாட்டுப்புறக் கலைகளை காட்சிப்படுத்தும் கலைவிழாவான பொங்கல் விழா நடத்தப்படும்.
* தமிழ்நாடு இயல், இசை நாடக மன்றத்தின் ஆண்டு அரசு நல்கை ரூ.3 கோடியாக உயர்த்தப்படும்.
அருங்காட்சியங்கள் துறை
* சென்னை அரசு அருங்காட்சியக படிமக்கூடங்கள் மிக சிறந்த அருங்காட்சியக நடைமுறைகளின்படி நல்ல அனுபவத்தை வழங்கும் வகையில் சிறப்பான காட்சியமைப்புகளுடன் ரூ.7 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.
*காஞ்சிபுரம்  மாவட்ட அரசு அருங்காட்சியகம் அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் கோவிலின் சுற்றுலா  விளக்க கட்டிடத்தில் மாற்றி அமைக்கப்பட்டு புதிய காட்சி கூடங்களுடன்  மேம்படுத்தும் பணிகள் ரூ.2 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.
* சென்னை அரசு அருங்காட்சியக பாரம்பரிய சுற்று சுவரின் உடைந்த பகுதிகளை பழுது பார்த்து மீட்டுவாக்கம் பணிகள் ரூ.45 லட்சத்தில் மேற்கொள்ளப்படும்.
*சென்னை அரசு அருங்காட்சியக வேதியியல் பாதுகாப்பு ஆய்வகம் ரூ.50 லட்சம் செலவில் மேம்படுத்தப்படும்.
தொல்லியல் துறை
* சிந்து சமவெளி முத்திரைகளுக்கும், குறியீடுகளுக்கும் இடையே உள்ள தொடர்பை ஆய்வு செய்வதற்கான பானை ஓடுகளில் பொறிக்கப்பட்டுள்ள குறியீடுகள் மற்றும் தமிழி( தமிழ்-பிராமி) எழுத்துக்களை ஆவணப்படுத்துதல், மின்பதிப்பாக்கம்
ஆகிய  பணிகள் ரூ.77 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படும்.
*தமிழ்நாடு தொல்லியல்  மற்றும் அருங்காட்சியகவியல் நிறுவனத்தில் மரபு மேலாண்மை மற்றும் அருங்காட்சியவியல் என்னும் ஈராண்டு முதுநிலை பட்டயப்படிப்பு ரூ.80 லட்சம்  செலவில் அறிமுகப்படுத்தப்படும்.

Tags : Minister ,Gold South , 2 year Masters Degree in Archeology and Museums: Announcement by Minister Gold South
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...