×

பைக் டேங்க் கொள்ளளவைவிட கூடுதலாக பெட்ரோல் போட்டதாக ரசீது கொடுத்த பங்க் ஊழியர்: பெண் ஆவேசம்

அம்பத்தூர்: சென்னை அம்பத்தூர் அருகே அத்திப்பட்டு பகுதியில் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் சார்பில் ஒரு தனியார் பெட்ரோல் பங்க்கில் நேற்று மாலை ரூ.3 லட்சம் மதிப்புள்ள பைக்கை மதுரவாயலை சேர்ந்த சோனாலி (25) என்ற பெண் ஓட்டிவந்து 15 லிட்டர் பெட்ரோல் போடும்படி ஊழியரிடம் கூறியுள்ளார்.
அவரிடம் ஊழியர் 18.4 லிட்டர் பெட்ரோல் போட்டதாக ரசீது வழங்கியுள்ளார். எனது வண்டியின் பெட்ரோல் டேங்க் கொள்ளளவே 15 லிட்டர்தானே. நீங்கள் எப்படி 18.4 லிட்டர் போட்டீர்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவலறிந்ததும் அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் விரைந்து வந்தனர்.
பின்னர் இருதரப்பிலும் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, எனது பைக்கின் ரிசர்வ் கொள்ளளவு 3.5 லிட்டர்.

அதற்கும் சேர்த்து 18.4 லிட்டர் பெட்ரோல் போட்டதாக பங்க் நிர்வாகம் எப்படி ரசீது கொடுக்கலாம் என சோனாலி ஆவேசத்துடன் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து, அந்த பைக்கின் பெட்ரோல் டேங்க்கை கழற்றி, அதில் இருந்த பெட்ரோலின் அளவை போலீசார் சோதனை நடத்தினர். அப்போது டேங்க்கில் இருந்து பெட்ரோலை வெளியே எடுத்து சோதித்ததில், ரிசர்வ் கொள்ளளவில் ஏற்கெனவே 3.5 லிட்டருடன் தற்போது 15 லிட்டர் பெட்ரோல் போட்டதால் மொத்தம் 18.5 லிட்டர் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, 15 லிட்டர் பெட்ரோலுக்கு மட்டும் சோனாலியிடம் பணத்தை பெற்று கொள்ளும்படி பங்க் நிர்வாகத்திடம் போலீசார் கூறி சமரச தீர்வு ஏற்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

Tags : Punk , Bike tank, capacity, than, receipt, punk employee
× RELATED சாவி வைக்கும் இடத்தை நோட்டமிட்டு...