×

'திராவிட மாடல் ஆட்சி என்பது எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல.. சாதி-மத அரசியலுக்கு எதிரானது' - சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு பேச்சு

சென்னை: சட்டப்பேரவையில் அறநிலையத்துறை மானியக்கோரிக்கையில் அமைச்சர் சேகர்பாபு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதாவது; அன்னைத் தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களுக்கு அர்ச்சனை கட்டணத்தில் 60% பங்குத் தொகை தரப்படும். தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களை ஊக்குவிக்க சிறப்புக் கட்டணச் சீட்டுகள் அறிமுகம் செய்யப்படும். ஒருகால பூஜை திட்டத்தில் நிதிவசதியற்ற மேலும் 2,000 கோயில்களுக்கு அரசு மானிய திட்டம் விரிவுபடுத்தப்படும். 27 திருக்கோயில்களில் ரூ.80 கோடியில் புதிய திருமண மண்டபங்கள் அமைக்கப்படும். 52 வாரங்களில் முக்கிய நகரங்களில் வள்ளலார் முப்பெரும் விழா நடத்தப்படும்.

மயிலாப்பூர், நெல்லை, தஞ்சை, திருவண்ணாமலை கோயில்களில் மகாசிவராத்திரியன்று மாபெரும் விழா நடத்தப்படும். மேலும் 8 கோயில்களில் யானைகளுக்கான குளியல் தொட்டிகள் அமைக்கப்படும். தமிழ் மூதாட்டி ஔவையாருக்கு ரூ.1 கோடியில் மணி மண்டபம்; 3 நாட்கள் அரசு விழா நடத்தப்படும். திருமணம் செய்யும் மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருந்தால் கோயில் சார்பில் புத்தாடை வழங்கப்படும். தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த பணிகள் ரூ.10 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பாக பழனி மலைக்கும் இடும்பன் மலைக்கும் இடையே கம்பிவட ஊர்தி அமைப்பதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். ராமேஸ்வரம், திருவண்ணாமலை மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆகிய மூன்று கோயில்களிலும் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். 1000 திருக்கோயில்களில் ரூ.500 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள், பராமரிப்பு, புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். நகர்புறங்களில் அமைந்துள்ள 200 சிறிய திருக்கோயில்களுக்கு ரூ.20 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

தமிழர் பண்பாடு மற்றும் கலாசாரத்தை விளக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான கலாசார மையம் முதற்கட்டமாக சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்படும். 10 கோயில்களில் முதற்கட்டமாக, உயிரிழந்த யானைகளுக்கு நினைவு மண்டபங்கள் அமைக்கப்படும். திராவிட மாடல் ஆட்சி என்பது எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல. சாதி-மத அரசியலுக்கு எதிரானது. இந்து சமய அறநிலையத்துறைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி காலம் பொற்காலமாக இருக்கும்.

ராமேஸ்வரம், மதுரை, திருவண்ணாமலை கோவில்களில் முழு நேர அன்னதான திட்டம் செயல்படுத்தப்படும். அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்களை மீட்டெடுக்கும் வேட்டை தொடரும். திமுக ஆட்சி முடிவதற்குள் 15 ஆயிரம் கோவில்களில் குடமுழுக்கு பணி நிறைவடையும் என கூறினார்.


Tags : Minister ,Sekarbabu ,Legislative ,Assembly , 'Dravidian model rule is not against any religion .. it is against caste-religion politics' - Minister Sekarbabu's speech in the Legislative Assembly
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...