×

அரகண்டநல்லூரில் மாற்று சாலையில் செல்லும் கனரக வாகனங்களால் விபத்து அபாயம்

*தடை விதிக்க பொதுமக்கள் கோரிக்கை

திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் அடுத்த அரகண்டநல்லூரில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள மாற்று சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரில் தனியார் பள்ளி அருகே தரைப்பாலம் உள்ளது. இந்த தரைப்பாலம் சேதமடைந்த காரணத்தால் மழைக்காலங்களில் அதிகளவில் தண்ணீர் செல்வதால் தொடர்ந்து திருக்கோவிலூர்-விழுப்புரம் போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது.

இதனால் விபத்துகளில் மனிதர்கள் சிக்கி உயிருக்கும் போராடிக் கொண்டிருக்கும் போது அவர்களை மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்சில் எடுத்து செல்ல முடியாமல் மனித உயிர்கள் காப்பாற்ற முடியாமல் இருந்து வந்தது. இதன் விளைவாக தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உத்தரவின் பேரில் மாவட்ட ஆட்சியர் அறிவுரையின் பேரில் தரைப்பாலம் முழுமையாக அகற்றப்பட்டு புதியதாக பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இதனால் கடந்த ஒரு மாதமாக அவ்வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டு தேவனூர், வடகரைதாழனூர் வழியாக  போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு அவ்வழியாக அனைத்து வாகனங்களும் சென்று கொண்டிருந்தது. ஆனால் இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள் அவசர காலத்தில் சுற்றி செல்ல சிரமம் ஏற்படுவதால் அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோளுக்கு இணங்க பேரூராட்சி மன்ற தலைவர் அன்பு நடவடிக்கையால் கார், ஆம்புலன்ஸ் மற்றும் இருசக்கர வாகனங்கள் செல்ல ஊர் முக்கியஸ்தர்கள் உதவியுடன் தனியார் நிலம் வழியாக பாதை சரிசெய்யப்பட்டு இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. ஆனால் அவ்வழியில் தனியார் பேருந்துகளும், லாரிகளும் செல்வதால் சாலைகள் சேதமடைந்தும், மின்சார ஒயர்கள் துண்டிக்கப்பட்டு மின்சாரமும் தடைப்பட்டு வருகிறது.

இதுமட்டுமின்றி அங்குள்ள குடியிருப்புகளுக்கு செல்லும் பைப் லைன்கள் கனரக வாகனங்களால் சேதமடைந்து குடிநீர் பற்றாக்குறையும் ஏற்படுவதால் அப்பகுதி பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆகையால் பொதுமக்களின் நன்மைக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள தற்காலிக சாலையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள் மட்டும் செல்லவும், கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க கோரியும் அப்பகுதி மக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், காவல் நிலையம், தாசில்தார் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். மேலும் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள மாற்று சாலையில் கனரக வாகனங்கள் செல்லக்கூடாது என்று அப்பகுதி பொதுமக்கள் கடந்த வாரம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Arakandanallur , Thirukovilur,People Request,Accident, Caution
× RELATED பஸ் கண்ணாடியை உடைத்த சிறுவர் உட்பட மூவர் கைது