×

படிக்க சென்று திரும்பிய 17 மாணவர்கள் சுட்டுக்கொலை நல்லா தான் போறாங்க; தீவிரவாதியா வாராங்க: பாக்.கின் வலையில் விழும் காஷ்மீர் இளைஞர்கள்

‘தீவிரவாதம்...’ இது, உலக மக்களை அச்சுறுத்தும் வார்த்தை மட்டுமல்ல. உலகின் வல்லரசு, பலமிக்க ராணுவம் கொண்ட நாடுகளையே கூட ஆட்டி படைக்கும் வார்த்தை. இதையே தங்களின் உயிர் மூச்சாக சுவாசித்து, உயிரை விடும் தீவிரவாதிகள் ஏராளம். இவர்களின் தலைமை பீடமாக விளங்கும் தீவிரவாத அமைப்புகளுக்கு அடைக்கலம் தருவது யார் என்று கேட்டால், கண்ணை மூடிக்கொண்டு அனைவரும் சொல்வார்கள் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் என்று... இந்த நாடுகளில் ஐஎஸ்ஐஎஸ், அல்-ெகாய்தா, லக்‌ஷர் இ தொய்பா, தலிபான் உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத அமைப்புகள் உள்ளன.

அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல், மும்பையில் உள்ள தாஜ் ஓட்டல் தாக்குதல் உள்ளிட்ட பல கொடூரமான தாக்குதல்களை நடத்தி, மனித உயிர்களை கொன்று குவித்தது இந்த அமைப்புகள். இது தவிர, பாகிஸ்தான் எல்லையை ஓட்டி உள்ள ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளை ஊடுருவ செய்து, அமைதியாக உள்ள இந்தியாவை சீர்குலைக்கும் முயற்சிகளில் இவை ஈடுபட்டு வருகின்றன. இதற்காக, பாகிஸ்தானில் உள்ள சிறப்பு முகாம்களில் தீவிரவாதிகளுக்கு ஆயுத பயிற்சி அளித்து, குளிர்காலங்களில் இந்திய எல்லைக்குள் அனுப்புகிறார்கள்.

இவ்வாறு அனுப்பப்படும் பெரும்பாலானோர் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள்தான். இவர்கள் அனைவரும் மிகப்பெரிய அளவில் மூளைச்சலவை செய்யப்பட்டு, மற்ற இளைஞர்களையும் தீவிரவாத வளையத்துக்குள் அழைத்து வர தூண்டப்படுகின்றனர். இவர்களின் கொலை வெறி திட்டத்தை அறியாத அப்பாவி இளைஞர்கள், ஒரு கட்டத்தில் அவர்களின் கொள்கையில் ஆழமாக மூழ்கி, தாய் நாட்டிற்கு எதிராகவே ஆயுதங்களை கையில் ஏந்தி தாக்குதல் நடத்த வருகின்றனர். இந்த வலையில், ஜம்மு காஷ்மீரை சேர்ந்த ஏராளமான இளைஞர்களும் சிக்கியுள்ள அதிர்ச்சி தகவல்கள் அடிக்கடி வெளியாகி வருகிறது.

இவர்கள் அனைவரும் நேரடியாக தீவிரவாத அமைப்புக்காக அழைத்து செல்லப்பட்டவர்கள் அல்ல. படிப்பு, பணம் என்று ஆசை வார்த்தை கூறி மூளைச்சலவை செய்யப்படுபவர்கள். பாகிஸ்தானில் மருத்துவம் போன்ற உயர் படிப்புகளில் சீட் வாங்கி தருவதாக கூறும் தீவிரவாத ஏஜென்டுகளின் ஆசை வார்த்தையில் மயங்குபவர்கள்.

தங்களின் எதிர்காலம் வளமாகி விடும் என்ற ஆசையில் செல்லும் இவர்கள், அங்கு தீவிரவாத அமைப்புகளால், மதவாத அமைப்புகளால் தீவிரவாதிகளாக மாற்றப்படுகின்றனர். நல்லவர்களாக பாகிஸ்தான் செல்லும் இவர்கள், தீவிரவாதிகளாக இந்தியா திரும்புகின்றனர். அங்கு ஆயுத பயிற்சி வழங்கப்பட்டு, ஸ்லீப்பர் செல்களாகவும், மனித வெடிகுண்டுகளாகவும் மாறி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீரில் இருந்து ஏராளமான இளைஞர்கள் பாகிஸ்தானுக்கு படிப்புக்காக சென்றுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் தீவிரவாத அமைப்புகளில் இணைந்து உள்ளனர்.  

காஷ்மீரில் நடக்கும் மோதலில் கொல்லப்படும் தீவிரவாதிகளை பற்றி பாதுகாப்பு படைகள் நடத்தும் விசாரணையில்தான் இந்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின்றன. போலி ஆவணங்களின் மூலம் பாகிஸ்தான் செல்பவர்கள் மட்டுமின்றி, முறையான பயண ஆவணங்களுடன் கல்வி படிக்க சென்ற 17 காஷ்மீர் இளைஞர்களும் கூட, காஷ்மீரில் சமீப காலங்களில் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர். பாகிஸ்தானில் படித்து விட்டு வந்து தங்களை காப்பாற்றுவார்கள் என்ற கனவில் இருந்த இவர்களின் பெற்றோர்கள், நிர்கதியற்று நிற்கிறார்கள்.

வலையில் சிக்கும் அப்பாவிகள்
* பாகிஸ்தானுக்கு படிக்கச் செல்லும் இந்திய மாணவர்களை, தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புள்ளவர்கள் முதலில் நட்பு ரீதியாக முதலில் நெருங்குவார்கள்.
* பின்னர், இந்தியாவில் நடக்கும் சம்பவங்கள், ராணுவ நடவடிக்கை போன்ற வீடியோக்கள், புகைப்படங்களை காட்டி, குறிப்பிட்ட பிரிவுக்கு எதிராக இந்திய அரசு செயல்படுவதாக ஆத்திரத்தை கிளப்பி, அவர்களின் மனநிலையை அறிவார்கள்.
* இந்த வலையில் சிக்கி ஆவேசப்படும் இளைஞர்கள்தான், அவர்களின் அடுத்த பலிகடா. அப்படியே மூளைச்சலவை செய்து தீவிரவாத முகாம்கள் பக்கம் அழைத்து சென்று விடுவார்கள்.
* அங்கு துப்பாக்கிச் சுடுவது உள்ளிட்ட ஆயுத பயிற்சி, குறுகிய நேரத்தில் எளிதில் கிடைக்கக் கூடிய வெடிமருந்துகளை பயன்படுத்தி வெடிகுண்டு தயாரிப்பது, அதை வெடிக்கச் செய்வது பற்றி பயிற்சி அளிக்கப்படுகிறது.
* ஆயுதங்களை பயன்படுத்த தெரிந்ததும், அவர்களின் அடையாளங்களை மறைத்து எல்லை வழியாக அனுப்பி, தாக்குதல் நடத்த பயன்படுத்தப்படுகின்றனர்.

உள்ளூர் தீவிரவாதிகளை போல் சித்தரிக்க முயற்சி
இந்த இளைஞர்களை வைத்து, சர்வதேச அளவில் பாகிஸ்தான் பெரிய கபட நாடகமே அரங்கேற்றுகிறது. ‘இந்திய அரசுக்கு எதிராக செயல்படுவதற்கு பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் யாரும் செல்வது இல்லை. இந்திய அரசின் அடக்குமுறைகளால் உள்ளூரை சேர்ந்த இளைஞர்களே தீவிரவாதிகளாக மாறி தாக்குதல் நடத்துகின்றனர். இவர்கள் உள்ளூர் தீவிரவாதிகள் என்ற முத்திரையை குத்துகிறது,’ பாகிஸ்தான்.

மாயமாகும் இளைஞர்கள்
கடந்த 2015 முதல் அதிகமான இளைஞர்கள் பாகிஸ்தானுக்கு  மேற்படிப்பு, உறவினர்களைச் சந்திக்க அல்லது திருமண நோக்கங்களுக்காக செல்வதற்கு பயண  ஆவணங்களை வாங்கியுள்ளனர். குறுகிய காலத்திற்கு செல்லுபடியாகும் விசாவில் பாகிஸ்தானுக்குச் சென்ற இவர்களில் பலர் திரும்பி வரவில்லை. அவர்கள் தீவிரவாத அமைப்புகள், பாகிஸ்தான் உளவுத்துறையான ஐஎஸ்ஐ.யின் வலையில் விழுந்து தீவிரவாதிகளாக மாறி இருக்கலாம் என பாதுகாப்பு அதிகாரிகள் கருதுகின்றனர். இந்த இளைஞர்கள் அனைவரும் நடுத்தர, ஏழை குடும்பங்களை சேர்ந்தவர்கள்.

தடை விதிக்கலாமே...
மருத்துவம் உள்ளிட்ட படிப்புக்காக பாகிஸ்தானுக்கு இந்திய மாணவர்கள் செல்ல வேண்டாம். பாகிஸ்தானில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் படிக்கும் இந்திய மாணவர்கள் இந்தியாவில் வேலை தேட முடியாது என்று தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும், ஒன்றிய உள்துறை அமைச்சக்கத்திடம் உரிய அனுமதி பெற்று சென்றால், விலக்கு அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தான் சென்ற பிறகு இந்திய இளைஞர்கள் ஸ்லீப்பர் செல்லாக பயன்படுத்தப்படுகிறார்கள் என்று கூறப்படுவதால், படிக்க செல்ல ஏன் தடை விதிக்க கூடாது?.

Tags : Terrorist Week ,Kashmir Youth ,Pakistan , Students, massacre, Kashmir, youth
× RELATED பெண்கள் ஒருநாள் தொடர் இங்கிலாந்திடம் ஒயிட் வாஷ் ஆன பாகிஸ்தான்