×

உக்ரைன் - ரஷ்ய போருக்கு மத்தியில் ஐரோப்பிய நாடுகளுக்கு மோடி இன்று பயணம்: 8 உலக தலைவர்களுடன் சந்திப்பு

புதுடெல்லி: உக்ரைன் - ரஷ்யா இடையே  போர் நடக்கும் சூழலில், பிரதமர் மோடி  இன்று முதல் 3 நாட்களுக்கு ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் செல்கிறார். ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க் ஆகிய மூன்று நாடுகளில் மேற்கொள்ளும் பயணத்தின்போது, 7 நாடுகளை சேர்ந்த 8 தலைவர்களை அவர் சந்தித்து  பேசுகிறார்.
நேட்டோ அமைப்பில் சேர முயன்ற உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து, 3வது மாதமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரின் காரணமாக உலகளவில் மிகப்பெரிய அளவில் பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. கச்சா எண்ணெய், எரிவாயு, சமையல் எண்ணெய் போன்றவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலைவாசிகள் உயர்ந்துள்ளன.  இந்த போரால் 3வது உலகப் போர் வெடிக்கும் அபாயமும் உள்ளது.

இதுபோன்ற பரபரப்பான சூழ்நிலையில், இந்தாண்டின் முதல் வெளிநாட்டு பயணமாக ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க் ஆகிய ஐரோப்பிய நாடுகளுக்கு பிரதமர் மோடி இன்று 3 நாள் பயணமாக செல்கிறார். முதலில் ஜெர்மனி செல்லும் அவர், அங்கிருந்து டென்மார்க் போகிறார். இன்று இரவு ஜெர்மனியிலும் நாளை இரவு டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனிலும்  தங்குகிறார். டென்மார்க் பயணத்தை முடித்துக் கொண்டு 4ம் தேதி பாரீஸ் செல்கிறார்.3 நாடுகளிலும் 65 மணி நேரம் செலவிடும் பிரதமர், 25 நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். 7 நாடுகளை சேர்ந்த 8  தலைவர்களை  சந்திப்பதுடன், உலக தொழிலதிபர்கள் 50 பேருடன் கலந்துரையாடுகிறார்.  அங்கு வாழும் ஆயிரக்கணக்கான வெளிநாடு வாழ்  இந்தியர்களையும்  சந்திக்கிறார்.

உக்ரைன்-  ரஷ்யா  போரால்  அனைத்து ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யாவுக்கு எதிராக ஓரணியில் திரண்டுள்ளன. இந்த நெருக்கடியான காலத்தில் மோடியின் இந்த சுற்றுப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இன்று ஜெர்மனி தலைநகர் பெர்லினில் அந்நாட்டின் அதிபர் ஒலாப் ஷோல்சை சந்தித்து  இரு தரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார்.  கடந்த டிசம்பரில் ஜெர்மனியின் அதிபராக இருந்த ஏஞ்சலா மெர்கலின் பதவிக் காலம் நிறைவடைந்த நிலையில், ஷோல்ஸ் புதிய அதிபராக பொறுப்பேற்றார்.

 டென்மார்க் பிரதமர் மேட்டே பிரெட்ரிக்சன் அழைப்பின் பேரில்  அந்த நாட்டுக்கு நாளை செல்கிறார். அங்கு நடக்கும் இந்தியா - நார்டிக் 2வது உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்.  மாநாட்டின் இடைவெளியில் நார்வே, ஸ்வீடன், ஐஸ்லாந்து, பின்லாந்து நாடுகளின் பிரதமர்களுடனும் கலந்துரையாடுகிறார். உச்சி மாநாட்டில் பொருளாதாரம், காலநிலை மாற்றம், தொழில்நுட்பம், மாற்று எரிசக்தி, சர்வதேச பாதுகாப்பு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. அதை தொடர்ந்து, பிரான்சுக்கு சென்று  அந்த நாட்டின் அதிபர் இமானுவேல்  மேக்ரானை மோடி சந்தித்து பேசுகிறார். தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை  தீவிரப்படுத்துவது, ரஷ்யா - உக்ரைன் போர் விவகாரம் உள்ளிட்ட  விஷயங்கள் இந்த சந்திப்பின்போது விவாதிக்கப்படும் என தெரிகிறது.  பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின்னர் 4ம் தேதி மோடி நாடு திரும்புகிறார்.

இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கு வாய்ப்பு
தனது வெளிநாட்டு பயணம் குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அமைதி, வளம் என்ற இந்தியாவின் வேட்கையில் ஐரோப்பிய நாடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த சுற்றுப்பயணத்தின் மூலம்  இந்த நாடுகளுடனான இருதரப்பு ஒத்துழைப்பு அதிகரிப்பதற்கான வாய்ப்பு  உருவாகி உள்ளது,’
என்று குறிப்பிட்டுள்ளார்.

போர் நிறுத்தம் வேண்டும்
பிரதமர் மோடி வெளிநாடு செல்லும் நிலையில், ஒன்றிய வெளியுறவு துறை செயலாளர் வினய் மோகன் கவாத்ரா டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில், ‘‘உக்ரைனில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும். அதன் பிறகு துாதரக ரீதியிலான பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். உக்ரைன் விவகாரத்தில் இந்தியா எடுத்துள்ள நடுநிலை கொள்கையை பல்வேறு நாடுகள் பாராட்டி உள்ளன,’’ என்றார்.

இதுவரையில் 62 நாடுகள்
பிரதமராக மோடி கடந்த 2014ல் பதவியேற்றார். அதன் பிறகு, கடந்த 7 ஆண்டுகளில் 62 முறை பல்வேறு உலக நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இறுதியாக, 2021ம் ஆண்டு அக்டோபர் 29 முதல் நவம்பர் 2ம் தேதி வரை இத்தாலி, பிரிட்டன்  நாடுகளுக்கு சென்றார்.  இந்தாண்டில்  மோடி மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

கனடாவில் படேல் சிலை
மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘கனடாவில் உள்ள மர்காம் நகரில் சர்தார் வல்லபாய் படேல் சிலை திறக்கப்பட உள்ளது. அங்கு வாழும் இந்தியர்களின் கடும் முயற்சியால் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவர்களின் இந்த முயற்சி பாராட்டதக்கது. இதன் மூலம், இந்தியாவுக்கும், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கும் இடையே நெருக்கமான  பிணைப்பு ஏற்படும்,’  என்று கூறியுள்ளார்.


Tags : Modi ,Ukraine ,Russia , Ukraine - Modi's visit to Russia, a European country
× RELATED உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத்...