×

கடலூர் சூரப்பநாயக்கன்சாவடியில் ஆக்கிரமிப்பு வீடுகள் அதிரடி அகற்றம்: மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

கடலூர்: கடலூர் சூரப்ப நாயக்கன் சாவடியில் குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 11 வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். தமிழகம் முழுவதும் நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில். கடலூர் சூரப்பநாயக்கன் சாவடியில் உள்ள குளத்தை ஆக்கிரமித்து 11 வீடுகள் கட்டப்பட்டிருந்தன. இந்த வீடுகளை உடனடியாக அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து பலமுறை அங்கு குடியிருப்போரிடம் நோட்டீஸ் கொடுக்கப்பட்டும், அவர்கள் அந்த வீடுகளை காலி செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் உத்தரவின்பேரில், கடலூர் மாநகராட்சி ஆணையர் விஸ்வநாதன் அறிவுறுத்தலின் பேரில், கடலூர் மாநகராட்சி, நகர் நல அலுவலர் அரவிந்த்ஜோதி, உதவி செயற்பொறியாளர் மகாதேவன், நகரமைப்பு ஆய்வாளர் அருள்செல்வன் மற்றும் ஊழியர்கள் நேற்று காலை சூரப்ப நாயக்கன் சாவடிக்கு சென்று அங்கு ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அங்கு குடியிருந்தவர்கள் தங்கள் பொருட்களை காலி செய்து எடுத்துச் சென்றனர். இதையடுத்து மாநகராட்சி ஊழியர்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் வீடுகளை இடித்து அகற்றினர். அப்போது அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடக்காமல் இருக்க கடலூர் டிஎஸ்பி கரிகால் பார் சங்கர் தலைமையில், கடலூர் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



Tags : Cuddalore ,Surapnayakkansavadi , Cuddalore Surappanayakkanchavadi Occupied Houses Action Removal: Corporation officials action
× RELATED கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை