×

மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்னவேல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்: சமஸ்கிருத உறுதிமொழி ஏற்ற விவகாரத்தில் அரசு அதிரடி நடவடிக்கை..!

சென்னை: மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்னவேல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சமஸ்கிருத உறுதிமொழி ஏற்ற விவகாரத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மதுரை மருத்துவக் கல்லூரியில் 68வது குழுவாக இணைந்த 250 முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் வரவேற்பு நிகழ்ச்சி நேற்று மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது. மதுரை மருத்துவக் கல்லூரி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், பி.மூர்த்தி, சட்டமன்ற உறுப்பினர்கள் புதூர் பூமிநாதன், வெங்கடேசன், மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்தினவேல் கல்லூரி துணை முதல்வர், பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் பலரும் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு வாசித்தனர். ஆங்கிலத்தில் ஏற்ற உறுதிமொழியில் சமஸ்கிருத வாக்கியங்கள் இருந்ததாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குனரகம் மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்தினவேலிடம் சமஸ்கிருதத்தில் உறுதி மொழி ஏற்றது தொடர்பாக விளக்கம் கேட்டுள்ளது.  மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்னவேல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். தன்னிச்சையாக விதி மீறி ஹிப்போகிரேடிக் உறுதி மொழிக்கு பதிலாக சம்ஸ்கிருத உறுதி மொழி எடுத்ததால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்ஸ்கிருத உறுதிமொழி ஏற்றது தொடர்பாக துறைரீதியான விசாரணை நடத்தவும் மருத்துவ கல்வி இயக்குனருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், ஹிப்போகிரேடிக் உறுதி மொழியை தவறாது கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்றது கண்டனத்துக்குரியது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கி.மு. 460ம் ஆண்டிலிருந்து கி.மு. 370ம் ஆண்டுவரை வாழ்ந்த ஹிப்போகிரேட் தான் மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். மருத்துவ தந்தையான ஹிப்போகிரேட் பெயரில் உறுதிமொழி ஏற்பது தான் மருத்துவம் படிப்போரின் வழக்கமாக இருந்து வருகிறது எனவும் தெரிவித்தார்.

Tags : Madurai Medical College ,Ratnavel ,Sanskrit , Madurai Medical College Chief Ratnavel's waiting list changed: Government takes action on Sanskrit pledge issue ..!
× RELATED மருத்துவக் கல்லூரியை சுற்றி டிரோன்களுக்கு தடை