சித்திரை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் குவித்த பக்தர்கள்: அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி பக்தர்கள் சுவாமி தரிசனம்

ராமநாதபுரம்: அமாவாசையை முன்னிட்டு முன்னோர்கள் வழிபாடு நடத்துவதற்காக ராமேஸ்வரத்தில் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இந்துக்களின் புனித தலமாகவும் தீர்த்த முத்தி ஸ்தலமாகவும் விளங்கும் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்து செல்லும் நிலையில், அமாவாசை காலங்களில் தங்கள் முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்து, பல்லாயிரக்கணக்கானோர் அக்னி தீர்த்த கடற்கரையில் குவிந்து வழிபாடு நடத்துவர்.

இந்நிலையில் இன்று சித்திரை அமாவாசையை முன்னிட்டு, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பல்லாயிரக்கணக்கானோர், அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி விட்டு தங்களுடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை நினைத்து கடற்கரை மண்டபத்தில் திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். அதன்பின் கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களில், புனித நீராட நீண்ட வரிசையில் நின்று, புனித நீராடி வருவதுடன் சுவாமி தரிசனம் செய்வதற்கும் கீழ ரத வீதியில் குவிந்த வண்ணம் உள்ளனர். கோவிலுக்கு சாமி தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் ஒவ்வொருவரையும் போலீசார் முக கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தி அணிந்த பின்பே கோவிலுக்குள் அனுப்பி வைக்கின்றனர். கோவில் நிர்வாகமும் பக்தர்கள் விரைவாக சுவாமி தரிசனம் செய்வதற்கு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

Related Stories: