×

ஆக்கிரமிப்பை அகற்றிய தாசில்தாருக்கு மிரட்டல்: தலைமறைவான 3 பேருக்கு வலை

கூடுவாஞ்சேரி: காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் நல்லம்பாக்கம் ஊராட்சி, கண்டிகை கிராமத்தில் பழமையான கங்கையம்மன் கோயில் பிரதான சாலை கேளம்பாக்கம் - வண்டலூர் சாலையில் இணைகிறது. இங்குள்ள ஒரு தரப்பினர், சாலையுடன் சேர்த்து தங்களுக்கு பட்டா இருப்பதாக கூறி சாலையின் குறுக்கே திடீரென பாறாங்கற்கள், மண்ணை கொட்டினர். இதனை கண்டதும் மற்றொரு தரப்பினர், சியாளநாதன் (40) தலைமையில் பொதுமக்களை அழைத்து வண்டலூர் தாசில்தாரிடம் நேற்று முன்தினம் புகார் அளித்தனர்.

அதன்பேரில் தாசில்தார் ஆறுமுகம், துணை தாசில்தார் ராஜா, நல்லம்பாக்கம் ஊராட்சி தலைவர் லட்சுமணன், துணை தலைவர் ஹேமமாலினி வாசு உள்பட வருவாய்த்துறையினர், நேற்று அப்பகுதிக்கு பொக்லைன் இயந்திரத்துடன் சென்றனர். அங்கு, சாலையின் குறுக்கே கொட்டப்பட்டு இருந்த மண் குவியலை அப்புறப்படுத்த முயன்றனர். உடனே, அதே பகுதியை சேர்ந்த சேதுராமன் (38) என்பவர், தனது பொக்லைன் இயந்திரத்தை சாலையின் நடுவே நிறுத்தி, மண் குவியலை அகற்ற முயன்ற பொக்லைன் இயந்திரம் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில், பொக்லைன் இயந்திரத்தின் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. மேலும், அங்கிருந்த தாசில்தாரை அவதூறாக பேசிவிட்டு, தப்பி சென்றார்.

தகவலறிந்து, கேளம்பாக்கம் உதவி கமிஷனர் ரவிக்குமாரன், தாழம்பூர் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, விசாரித்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சேதுராமன் உள்பட 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும், சாலையின் நடுவே சேதுராமன் விட்டு சென்ற பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்தனர்.


Tags : Dasildar , Threat to Dashildar, 3 undercover
× RELATED தேர்தல் பறக்கும் படை சோதனை:...