×

ஆணாக மாறுவதாக கேலி செய்ததால் பள்ளியின் மாடிக்கு ஓடிச்சென்று குதிக்க முயன்ற பிளஸ் 1 மாணவி

பள்ளிபாளையம்: நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், சுமார் 2 ஆயிரம் மாணவிகள் படித்து வருகின்றனர். பிளஸ்1 கலைத்துறை வகுப்பில் 30 மாணவிகள் படிக்கின்றனர். இதில் சில்லாங்காடு பகுதியில் இருந்து வரும் மாணவி ஒருவர், ஆண்களை போல கிராப் வெட்டிக்கொள்வதும், ஆண்களை போல உடைகளை அணிவதிலும் ஆர்வம் காட்டி வந்தார். இதனால், சக மாணவிகள் அவரை கேலி கிண்டல் செய்வதுடன், அவருடன் சேராமலும் இருந்து வந்தனர். சக மாணவிகளின் புறக்கணிப்பால், அந்த மாணவி தனித்து விடப்பட்டார். இந்நிலையில், நேற்று மதியம், உணவு இடைவேளை முடிந்து, வகுப்பு துவங்கியது.

அப்போது மாணவிகள் சிலர், அந்த மாணவியை நீ ஆணாக மாறுகிறாய் என கேலி செய்துள்ளனர். இதனால் விரக்தியடைந்த அந்த மாணவி, வகுப்பு முடிந்ததும் மளமளவென வகுப்பறை கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு சென்றார். மூன்றாவது நிலையில் உள்ள மொட்டை மாடியில் இருந்து குதிப்பதாக அவர் சத்தம் போட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த சக மாணவிகள், மொட்டை மாடிக்கு ஓடி, அவரை தடுத்து நிறுத்தி கீழே தூக்கி வந்தனர். பள்ளி தலைமை ஆசிரியை சரஸ்வதி, மாணவியை தனியாக அழைத்து சென்று விசாரித்து, சமாதானப்படுத்தினார். இதுகுறித்து பெற்றோர் ஆசிரியர் கழகம், கல்வித்துறை, காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து ஏடிஎஸ்பி செல்லதுரை, டிஎஸ்பி சீனிவாசன், இன்ஸ்பெக்டர் சந்திரகுமார், டிஇஓ விஜயலட்சுமி ஆகியோர் பள்ளிக்கு விரைந்தனர். மாணவியை நேரில் சந்தித்து, அவரது மனக்குறையை கேட்டு ஆறுதல் தெரிவித்தனர். மேலும், சக மாணவிகளுக்கு தலைமை ஆசிரியை அறிவுரை வழங்கினார்.

Tags : Plus 1 student who tried to jump
× RELATED தாளவாடி மலைப்பகுதியில் வனத்துறை வைத்த கூண்டில் சிறுத்தை சிக்கியது