×

காரைக்கால் கடற்கரை சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் பொதுமக்கள் பீதி-மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

காரைக்கால் : காரைக்கால் கடற்கரை சாலையில் கால்நடைகள் சுற்றி திரிவதால் பொதுமக்கள் வருவதற்கு அச்சம் தெரிவிக்கின்றனர். இரவு நேரங்களில் கால்நடைகள் சாலையில் படுத்திருப்பதால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. இதற்கு உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தின் கடற்கரை பகுதியில் கால்நடைகள் பெருமளவு சுற்றித் திரிவதால் சுற்றுலா பயணிகள் அங்கு வர அச்சம் தெரிவிக்கின்றனர். மேலும் சனிக்கிழமைகளில் திருநள்ளாறில் உள்ள சனி பகவான் ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் ஆலயத்தில் தரிசனம் செய்த பிறகு கடற்கரைக்கு வந்து குழந்தைகளுடன் விளையாடி மகிழ்கின்றனர்.
அச்சமயம் இப்பகுதிகளில் கால்நடைகள் பெருமளவு சுற்றித் திரிவதால் சுற்றுலா பயணிகளுடன் வரும் குழந்தைகள் கால்நடைகளை கண்டு அஞ்சும் நிலையில் உள்ளது. இதனால் பெருமளவு சுற்றுலாப் பயணிகள் கடற்கரைக்கு வருவதை தவிர்த்து வருகின்றனர். கடற்கரை சாலையில் சுமார் 100க்கும் மேற்பட்ட மாடுகள், குதிரைகள், பன்றிகள் மற்றும் நாய்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. மேலும் இப்பகுதியில் உள்ள மின் விளக்குகள் சரிவர பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைந்துள்ளது.

இதனால் இரவு நேரங்களில் சாலைகள் இருண்டே காணப்படுகிறது. மேலும் இருட்டில் மது பிரியர்கள் குடித்துவிட்டு மது பாட்டில்களை அங்கேயே போட்டு உடைத்து விடுகின்றனர். இதனால் காலையில் நடைபயிற்சி செல்வோரின் கால்களை உடைந்த கண்ணாடிகள் பதம் பார்க்கிறது.

மேலும் இருண்ட பகுதிகளில் கால்நடைகள் படுத்திருப்பதால் வாகனங்களில் வருபவர்கள் அவற்றின் மீது மோதி விபத்து ஏற்படும் அபாய நிலையும் உருவாகியுள்ளது. இவற்றையெல்லாம் மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகமும் கவனத்தில் கொண்டு உடனடியாக இப்பகுதியில் கால்நடைகள் திரிவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் மின்விளக்குகள் சரி செய்து கடற்கரை சாலை பகுதி வெளிச்சமாக வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Karaikal beach road , Karaikal: Cattle roaming on the Karaikal beach road are causing fear among the public. Night
× RELATED காரைக்கால் கடற்கரை சாலையில் இன்று குடியரசு தினவிழா கொண்டாட்டம்