×

மணலி புதுநகரில் பயங்கரம் ஆட்டோ டிரைவர் அடித்து கொலை: சடலத்துடன் செல்பி எடுத்து வீடியோ வெளியிட்டு ரசிப்பு

திருவொற்றியூர்: மணலி புதுநகரில் ஆட்டோ டிரைவரை அடித்துக்கொலை செய்துவிட்டு சடலத்துடன் செல்பி எடுத்து அந்த வீடியோவை நண்பர்களுக்கு அனுப்பி ரசித்தது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதுசம்பந்தமாக பிரபல ரவுடி உள்பட 4 பேரை கைது செய்தனர். சென்னை மணலி புதுநகர் பகுதியில் தலை நசுங்கிய நிலையில் கிடந்த ஆண் சடலத்தை ஒருவர் செல்பி எடுத்து வெளியிட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மணலி புதுநகர் போலீசார் இந்த செல்பி படம் எடுத்தவர் யார் என்று விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், மணலி புதுநகர் எம்ஆர்எப் குடியிருப்பு அருகே புதர்கள் நடுவே ஒரு ஆண் சடலம் கிடப்பதாக கிடைத்த தகவல்படி, மணலி புதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அங்கு கிடந்த சடலத்தை ஆய்வு செய்தபோது அது சமூக வலைதளங்களில் பரவியது என்பது தெரியவந்தது. இதன் அடிப்படையில், வீடியோ பகிரப்பட்ட நம்பரை வைத்து மணலி புதுநகரை சேர்ந்த பிரபல ரவுடி ஆறுவிரல்மதனை(27) பிடித்து விசாரித்தபோது அவர்தான் கொலை செய்தார் என்று தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது; மணலி புது நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(32). இவர் ஆட்டோ டிரைவர். இவரது மனைவி கீர்த்தனா. இவர்களுக்கு ஒன்றரை வயதில் மகன் உள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன் போதையில் இருந்த ரவுடி ஆறுவிரல் மதனுக்கும் ரவிச்சந்திரனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதன்பின்னர் இருவரும் சமாதானமானதுடன் அடிக்கடி சந்தித்து பேசியுள்ளனர். இருப்பினும் மோதல் பிரச்னையை மதன் மறக்காமல் ரவிச்சந்திரனை தீர்த்துக்கட்ட வேண்டும் என்ற உறுதியுடன் இருந்துள்ளார்.

இதன்படி, நேற்று மதியம் மதன் தனது கூட்டாளிகளான ரவிச்சந்திரன், மணலி புதுநகரை சேர்ந்த குத்தா(24), பரத் (26), பப்லு (27) ஆகியோரை மது குடிக்கலாம் என்று கூறி, மணலி புதுநகர் எம்ஆர்எப் குடியிருப்பு அருகே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர். பின்னர் போதை ஏறியதும் தாங்கள் வைத்திருந்த கத்தியை எடுத்து ரவிச்சந்திரன் தலையில் சரமாரியாக வெட்டியுள்ளனர். பின்னர் அங்கு கிடந்த ஒரு பாறாங்கல்லை எடுத்து தலையில் போட்டு நசுக்கி துடிதுடிக்க கொலை செய்துள்ளனர். ரத்தவெள்ளத்தில் ரவிச்சந்திரன் இறந்ததும் ரவுடி மதன், அந்த காட்சியை தனது செல்போனில் செல்பி எடுத்து கூட்டாளிகளுக்கு அனுப்பியுள்ளார். இதன்பின்னர் அவர்கள், அந்த செல்பியை சமூக வலைதளங்களில் ஏராளமானோருக்கு அனுப்பி பரப்பியுள்ளனர். இவ்வாறு தெரியவந்துள்ளது. இதனிடையே மணலி புதுநகர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த மதன், அவரது கூட்டாளிகளை நேற்று இரவு கைது செய்து காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இவர்கள் 4 பேர் மீதும் ஏற்கனவே கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளது.

Tags : Manali ,New Delhi , Sand, auto driver, beaten, murdered
× RELATED மணலி சாலையில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்