×

பிறந்தநாளில் ரங்கநாதர் அணிய ஆண்டாள் அணிந்த பட்டு வஸ்திரம் ஸ்ரீரங்கம் சென்றது

திருவில்லிபுத்தூர்: பிறந்தநாளில் ரங்கநாதர் அணிந்து கொள்ள, திருவில்லிபுத்தூர் ஆண்டாள் அணிந்த பட்டு வஸ்திரம் நேற்று ஸ்ரீரங்கத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் வரும் ரேவதி நட்சத்திரம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் பிறந்த தினமாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு சித்திரை ரேவதி தினம் நாளை வருகிறது. இதையொட்டி திருச்சி ஸ்ரீரங்கத்தில் நாளை தேரோட்டம் நடைபெறுகிறது. தேரோட்டத்தின்போது, திருவில்லிபுத்தூர் ஆண்டாள் அணிந்த பட்டு வஸ்திரத்தை அணிந்து, ரங்கநாதர் தேரில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

இந்நிகழ்ச்சியை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நேற்று காலை ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்ட பட்டு வஸ்திரத்தை ரங்கத்திற்கு கொண்டு செல்லும் வைபவம் நடந்தது. முன்னதாக ஆண்டாள், ரங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து ஆண்டாளுக்கு பட்டு வஸ்திரம் அணிவிக்கப்பட்டது. பின்னர் ஒரு கூடையில் அந்த பட்டு வஸ்திரத்தை வைத்து, மேளதாளம் முழங்க மாட வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, பின்னர் திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த வைபவத்தில் திருவில்லிபுத்தூர் மட்டுமன்றி பல்வேறு பகுதியில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் கோயில் நிர்வாக அதிகாரி முத்துராஜா மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன் தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags : Srierangam ,Andal ,Ranganadar , The silk worn by Andal to be worn by Ranganathar on his birthday The dress went to Srirangam
× RELATED தெளிவு பெறுவோம்!!