விருத்தாசலம் அருகே வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டிய போது கிருஷ்ணர் சிலை கண்டெடுப்பு

விருத்தாசலம்: விருத்தாசலம்  அருகே வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டியபோது கிருஷ்ணர் உலோக சிலை கிடைத்தது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள கிளிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினம் (65), விவசாயி. இவர் நேற்று தனது கூரை வீட்டின் அருகில், அரசால் வழங்கப்பட்ட தொகுப்பு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம் தோண்டியுள்ளார். அப்போது சுமார் 3 அடி ஆழத்தில் ஏதோ ஒரு பொருள் கடப்பாரையில் தட்டுப்பட்டுள்ளது. தொடர்ந்து தோண்டி எடுத்து பார்த்தபோது, அதில் செம்பு உலோகத்திலான 10 வளையல்கள் மற்றும் கிருஷ்ணர் உலோக சிலை ஒன்று இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்த ரத்தினம், கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார்.

போலீசார் விரைந்து சென்று, சிலை மற்றும் உலோக பொருட்களை கைப்பற்றி திட்டக்குடி வருவாய் துறையினரிடம் ஒப்படைத்தனர். அதனை பெற்ற வருவாய் துறையினர், கடலூர் அருங்காட்சியகத்திற்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து திட்டக்குடி வருவாய் துறையினர் கூறுகையில், ‘சிலை ஆய்வாளர்கள் ஆய்வு செய்து, இது எந்தவிதமான உலோகத்தால் செய்யப்பட்டவை, எத்தனை வருடங்களுக்கு முன்பு செய்யப்பட்டவை, இதனுடைய மதிப்பு மற்றும் இந்த பகுதியில் பூமிக்கு அடியில் புதைந்தது எப்படி என்ற வரலாறு குறித்து விசாரணை செய்யப்பட உள்ளது. இதன் பின்புதான் இந்த சிலையின் முழு விவரம் தெரியும் என்றனர்.

Related Stories: