அண்ணனாவது... தம்பியாவது... லாலுவின் மூத்த மகனை நிர்வாணமாக்கி பிணைக் கைதியாக அறையில் அடைப்பு: பீகாரை கலக்கும் பரபரப்பு வீடியோ

பாட்னா: பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவருமான லாலு பிரசாத் யாதவின் மூத்த மகனான தேஜ் பிரதாப் யாதவ் நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘விரைவில் எனது தந்தையை சந்திக்க உள்ளேன். அவரது அடிச்சுவடுகளைப் பின்பற்றி வருகிறேன். கட்சித் தொண்டர்களையும் மதிக்கிறேன். விரைவில் கட்சிப் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய உள்ளேன்’ என்று தெரிவித்துள்ளார். முன்னதாக நேற்று மதியம் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் பாட்னா தலைவர் ராம்ராஜ் யாதவ் வெளியிட்ட வீடியோவில், ‘முன்னாள் முதல்வர் ரப்ரி தேவியின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் தேஜ் பிரதாப் பிணைக் கைதியாக வைக்கப்பட்டுள்ளார்.

அவரை நிர்வாணப்படுத்தி தாக்கியுள்ளனர். வெள்ளிக்கிழமை இப்தார் விருந்து நடந்த போது, அவரை ஒரு அறைக்குள் வைத்து பூட்டினர். தேஜ் பிரதாப்பின் இளைய சகோதரர் தேஜஸ்வி யாதவ் மற்றும் கட்சியின் மாநிலத் தலைவர் ஜக்தானந்த் சிங் ஆகியோர்தான் காரணம். லாலுவும் இதில் தலையிடவில்லை’ என்று கூறியுள்ளார். இந்த வீடியோ வெளியான சிறிது நேரத்தில், கட்சியில் இருந்து விலகப் போவதாக தேஜ் பிரதாப்பும் அறிக்கை வெளியிட்டார்.

லாலுவின் 2 மகன்களான தேஜ் பிரதாப், தேஜஸ்வி இடையே, கட்சியை பிடிப்பதற்கா போட்டி நீண்ட காலமாக நடந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது 2 பேருக்கும் இடையே மீண்டும் மோதல்கள் ஏற்பட்டுள்ளன. ஒரு காலத்தில் தேசிய அரசியலில் கொடி கட்டி பறந்த லாலு பிரசாத் யாதவ், கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிக்கி, அடுத்தடுத்து சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். உடல்நிலையும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதுபோன்ற நிலையில், அவருடைய மகன்கள் பதவிக்காக அடித்து கொள்வது பீகார் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories: