×

கொடநாடு பங்களா ரகசிய அறைகள் பற்றி மர வியாபாரி சஜீவனிடம் 8 மணி நேரம் விசாரணை

கோவை:கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விசாரணையின் உச்ச கட்டமாக ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவிடம் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையிலான போலீசார் சென்னையில் விசாரணை நடத்தினர். இந்நிலையில் இந்த வழக்கில் கோத்தகிரி மற்றும் கோவையில் மர வியாபாரம் செய்து வரும் சஜீவன் என்பவரிடம் ஐஜி சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் கோவையில் நேற்று 8 மணி நேரம் விசாரித்தனர். சம்பவம் நடந்த நாளில் இவர் துபாயில் இருந்ததாகவும், சஜீவன் கொடநாடு எஸ்டேட் பங்களாவில் பல்வேறு மர பொருட்களை வடிவமைத்து தந்துள்ளதாகவும் தெரிகிறது.

மேலும் இறந்த டிரைவர் கனகராஜின் நெருங்கி நண்பரான இவர் கொடநாடு பங்களாவிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அந்த பங்களாவில் எந்த தடையும் இல்லாமல் சென்று வரும் அதிகாரம் பெற்ற நபராக சஜீவன் இருந்துள்ளார். இந்த பங்களாவில் உள்ள ரகசிய அறைகள் குறித்த முழு விவரங்களும் சஜீவனுக்கு தெரியும் என போலீசார் கருதுகின்றனர்.
 சஜீவனின் உதவியாளராக சயான் பணியாற்றி வந்துள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ஆனால் இந்த வழக்கில் சஜீவனின் தொடர்பு குறித்து முழுமையான விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

போலீசார் விசாரணையின்போது, கொடநாடு பங்களாவில் உள்ள விலை மதிப்புமிக்க பொருட்கள், ரகசிய அறைகள், முக்கிய ஆவணங்கள் எந்த அறையில் யார் கட்டுப்பாட்டில் இருந்தது? கைதான நபர்களில் யார் யார் பங்களாவிற்கு சென்று வந்துள்ளனர்? குற்றவாளிகளில் உங்களது தொடர்பில், நட்பில் உள்ள நபர்கள் யார்? பங்களாவில் மர பொருட்கள் பணி நடந்தபோது யார் யார் வந்தார்கள்? முன்னாள் அமைச்சர்கள், அரசியல் கட்சியினருடன் பழக்கம் இருக்கிறதா? கொலை, கொள்ளை சம்பவம் குறித்து உங்களுக்கு முன் கூட்டியே ஏதாவது தகவல் கிடைத்ததா? உங்களிடம் வேலை செய்த சயான் குறித்த முழு விவரங்கள் உங்களுக்கு தெரியுமா? கனகராஜ் இறப்பு குறித்து என்ன நினைக்கிறீர்கள்? உள்ளிட்ட கேள்விகளை சஜீவனிடம் போலீசார் கேட்டுள்ளனர். இதற்கு சஜீவன் அளித்த பதில்கள் மற்றும் முக்கிய தகவல்களை போலீசார் வீடியோ பதிவு செய்தனர்.

நீதிபதி மாற்றம்
ஊட்டி: கொடநாடு கொலை வழக்கு கடந்த 4 ஆண்டுகளாக  ஊட்டியில் உள்ள நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கை துவக்கத்தில்  நீதிபதி வடமலை விசாரித்து வந்தார். அவர் கடந்த ஓராண்டிற்கு  முன் பணி மாற்றம் செய்யப்பட்டார். அதன்பின்னர் ஒரு வருடத்திற்கும் மேலாக  நீதிபதி  சஞ்சய்பாபா விசாரித்து வந்தார். தமிழகத்தில் நீதிபதிகள்  மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்து வந்த  நீதிபதி சஞ்சய்பாபாவும் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக சென்னை தொழிலாளர் தீர்ப்பாயம் நீதிபதியாக இருந்த முருகன் நீலகிரி மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.


Tags : Sajeevan ,Kodanadu , Kodanadu Bungalow Secret Rooms, Wood Dealer, Sajeevan, Investigation
× RELATED வனவிலங்குகளை வேட்டையாடிய வழக்கு:...