×

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் செவிலியர்கள் காலவரையற்ற போராட்டம்: முக்கிய அறுவை சிகிச்சைகள் தடைபட்டதாக மருத்துவர்கள் குற்றச்சாட்டு

டெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஏராளமான செவிலியர்கள் காலவரையற்ற தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு பணிச்சுமை மற்றும் பணியாளர் பற்றாக்குறையே காரணம் என செவிலியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை பணிச்சுமை காரணமாக சில செவிலியர்கள் வேலை நிறுத்தத்தில் இருந்துள்ளனர். இது தொடர்பாக மருத்துவர்களிடம் முறையிட்ட செவிலியர் சங்கத்தின் தலைவர் ஹரிஷ்குமார் கஜ்லா பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.

ஆனால், இதுகுறித்து மருத்துவர்கள் தரப்பு  கூறுகையில், செவிலியர் சங்கத் தலைவர் ஹரிஷ்குமார் கஜ்லா மருத்துவர்களை தகாத வார்த்தைகளால் திட்டியதாலும், செவிலியர்கள் போராட்டத்திற்கு தலைமை தாங்கியதால், 3 நாட்களாக 80-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் பாதிக்கப்பட்டு,  நோயாளிகளுக்கு மயக்கமருந்து செலுத்தும் அவல நிலை ஏற்பட்டதாகவும் மருத்துவ நிர்வாகம் குற்றம்சாட்டியது. இந்நிலையில் செவிலியர் சங்கத் தலைவரை பணியிடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்தும், அவருக்கு விதிக்கப்பட்ட  பணியிடை நீக்க உத்தரவை  உடனடியாக ரத்து செய்ய வேண்டுமெனக் கூறியும் செவிலியர்கள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

சுமார் 500-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஊதிய உயர்வு, போதிய அளவு பணியாளர்கள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். இது ஒருபுறம் இருக்க, மற்றொருபுறம் செவிலியர்கள் இன்றி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க இயலாமல், அவர்கள் தவிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.


Tags : Delhi Aims Hospital , Delhi, AIIMS Hospital, nurse, struggle, surgery, ban
× RELATED ஒன்றிய அமைச்சரின் தாய் மரணம்