×

ரூ.21 லட்சம் சொத்துக்களை பிரித்துக்கொண்டு தாய்க்கு இறுதிச்சடங்கு செய்யாமல் 2 நாளாக வைத்திருந்த மகன், மகள்கள்: ஆந்திராவில் அவலம்

திருமலை: ரூ.21 லட்சம் மதிப்புள்ள தாயின் சொத்துக்களை மகன், மகள்கள் பிரித்துக்கொண்டு இறுதிச்சடங்கு பணத்தகராறில் சடலத்தை 2 நாட்களாக வீட்டில் வைத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டம் கண்டுலவாரிகூடத்தை சேர்ந்தவர் வெங்கடரெட்டி. இவரது மனைவி லட்சுமியம்மா(80). இவர்களுக்கு 2 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். இளைய மகன் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். மற்றொரு மகன், மகள்கள் அனைவரும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் வெங்கடரெட்டியும் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டதால் லட்சுமியம்மாள் இளைய மகளுடன் நெரேடுச்சர்லாவில் வசித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் லட்சுமியம்மா, குளியலறையில் தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு மிரியாலகுடாவில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தது. இதனால் டாக்டர்கள் அறிவுறுத்தலின்பேரில் வீட்டுக்கு அழைத்து வந்த நிலையில் 2 நாட்களுக்கு முன் இறந்துவிட்டார்.

தகவலறிந்த வந்த அவரது மகன், தாயின் சடலத்தை பிரீசர் பாக்ஸ்சுடன் ஆம்புலன்ஸ்சில் ஏற்றி தனது வீட்டிற்கு கொண்டு சென்று இறுதிச்சடங்கு செய்ய முயன்றார். இதற்கு 3 மகள்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். உடல்நிலை பாதிக்கப்பட்டபோது கவனிக்காமல் விட்டுவிட்டு, தாயின் மீது உள்ள ₹21 லட்சம் சொத்து மற்றும் நகைகளை எடுத்துக் கொள்வதற்காகத்தான் இறுதிச்சடங்கு செய்ய கொண்டு செல்வதாகவும், சொத்து பிரச்னையை தீர்க்கும் வரை சடலத்தை கொண்டு செல்லக்கூடாது எனக்கூறி வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து லட்சுமியம்மாவுக்கு சொந்தமான ₹21 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களில், ₹6 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை சிறிய மகள் செய்த மருத்துவ செலவுக்காக ஒதுக்கப்பட்டது. மீதமுள்ள ₹15 லட்சத்தை மகன், மற்ற 2 மகள்களுக்கும் பிரித்துக்கொடுக்கப்பட்டது. அதேபோல் 3 மகள்களுக்கும் 6 சவரன் தங்க நகைகள் பிரித்து வழங்கப்பட்டது. ஆனால், ‘இறுதிச்சடங்கிற்கு 3 மகள்களும் பணம் கொடுத்தால்தான் இறுதிச்சடங்கு செய்வேன். அதுவரை சடலத்ைத கொண்டு செல்லமாட்டேன்’ என மகன் கூறினார்.

இதற்கு மற்றவர்கள் ஒப்புக்கொள்ளாததால் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதிச்சடங்கு செய்ய முடியாமல் 2 நாட்களாக லட்சுமியம்மாவின் சடலம் வீட்டில் ஃப்ரீசர் பாக்ஸில் வைக்கப்பட்டிருந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஊர் பொதுமக்கள் நேற்று அங்கு வந்து அனைவரையும் சமாதானம் செய்தனர். அப்போது இறுதி சடங்கு செய்த பின், உங்கள் பிரச்னையை பார்த்துக்கொள்ளுங்கள் என கூறினர். இதையடுத்து லட்சுமியம்மாவின் சடலம் நேற்று மகன் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு இறுதிச்சடங்கு நடந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

The post ரூ.21 லட்சம் சொத்துக்களை பிரித்துக்கொண்டு தாய்க்கு இறுதிச்சடங்கு செய்யாமல் 2 நாளாக வைத்திருந்த மகன், மகள்கள்: ஆந்திராவில் அவலம் appeared first on Dinakaran.

Tags : ANDHRA ,Venkadareti ,Suryapet District Council ,AP ,Lakshmiyamma ,
× RELATED தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள்...