×

திண்டுக்கல், கரூர் மாவட்டங்கள் அடங்கிய பகுதியில் இந்தியாவின் முதல் தேவாங்கு வன உயிரின சரணாலயம்: வனத்துறை அமைச்சர் தகவல்

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று வனத்துறை மீதான மானியக்கோரிக்கையின் போது அமைச்சர் கா.ராமச்சந்திரன் வெளியிட்ட அறிவிப்பு: திருப்பூரில்  நஞ்சராயன் குளம் தமிழ்நாட்டின்  17வது பறவைகள் சரணாலயமாக அறிவிக்கை செய்யப்படும். இம்மையம் பறவைகள் குறித்த  பாதுகாப்பு, ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நடவடிக்கைகளை மேம்படுத்துவதை  நோக்கமாக கொண்டு செயல்படும். காவிரி  தெற்கு வன உயிரின சரணாலயம் என்ற புதிய வன உயிரின சரணாலயம் சுமார் 478 சதுர  கிலோமீட்டர் பரப்பளவில் ஓசூர் கோட்ட அஞ்செட்டி, உரிகம் மற்றும் ஜவளகிரி  சரகங்களின் வனநிலங்களை உள்ளடக்கி அமைக்கப்படும். இந்தியாவின் முதல் தேவாங்கு உன உயிரின சரணாலயம் திண்டுக்கல் மற்றும் கரூர்  மாவட்டங்களை உள்ளடக்கிய வனப்பகுதியில் அமைக்கப்படும்.

இந்த அறிவிப்பிற்கான  கணக்கெடுப்பு, மதிப்பீடுகளை உள்ளடக்கிய விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க  இந்த ஆண்டில் ₹5 கோடி அரசால் ஒதுக்கீடு செய்யப்படும்.   இந்த ஆண்டில் 100 கிராமங்களில் மரகதப் பூஞ்சோலைகள்  ஏற்படுத்தப்படும். வனத்தையொட்டியுள்ள கிராமங்களில் இப்பசுமை சோலைகள்  ஏற்படுத்தப்படும். கிராமத்தின் பொது நலனுக்காக உள்ளூர் சமூகம் இந்த  சோலைகளிலிருந்து பொதுப்பயன் உரிமைகளைப் பெற்றிருக்கும். இந்த மரகதப்  பூஞ்சோலைகள் 100 ஹெக்டேர் பரப்பளவில் ₹25 கோடி செலவில் உருவாக்கப்படும்.  

களக்காடு  முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் உயிர்ப்பன்மை ஆய்வகம் மற்றும் சுற்றுலா  மையம் ஏற்படுத்தப்படும். வனப்பகுதியில் உள்ள அந்நிய களைத்தாவரங்களை அகற்றி  அப்பகுதிகளில் சூழலினை மறுசீரமைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டு  வருகிறது. சூழலியல் மீளுருவாக்கத்தின்  மறுசீரமைப்பு முயற்சியின் ஒரு பகுதியாக உள்ளூர் தாவர இனங்கள் நடப்படும்.  2022-23ம் ஆண்டில் இந்த பணிகளுக்காக ஏற்கனவே அரசால் ₹5 கோடி ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளது. இதுதவிர ₹17.42 கோடி செலவில் இப்பணிகள் ஜப்பானிய  பன்னாட்டு கூட்டுறவு முகமை மற்றும் தமிழ்நாடு அரசு நிதியுதவியுடன்  செயல்படுத்தப்படும்.  வனத்துறையின் மேலாண்மை செயல்பாடுகள் மற்றும்  சேவைகளில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ₹37 கோடி ஒதுக்கீடு  செய்யப்படும். நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் சோலைக்காடுகள் பாதுகாப்பு  மையம் அமைக்கப்படும். இம்மையம் ₹5.2 கோடி செலவில் அமைக்கப்படும்.


Tags : India ,Devangu Wildlife Sanctuary ,Dindigul ,Karur ,Minister , India's first Devangu Wildlife Sanctuary in Dundukkal and Karur districts: Minister of Forests
× RELATED வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும்...