பாஜ நயினார் நாகேந்திரன் பாராட்டு கட்சி பாராமல் தொகுதிக்கு திட்டங்களை முதல்வர் தொடர்ந்து கொடுக்கிறார்

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பாஜ சட்டபேரவை கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில் ‘‘திருநெல்வேலியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி துவங்க வேண்டும்’’ என்றார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் பொன்முடி பேசுகையில், ‘‘திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது 1 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, 9 அரசு உதவிபெறும் கலை அறிவியல் கல்லூரியும், 18 சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகளும் உள்ளது. திருநெல்வேலி மாவட்டம் மானுரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்க அனுமதி வழங்கப்பட்டு 2022-23ம் ஆண்டு முதல் செயல்பட உள்ளது. இதை தவிர 1 அரசு பொறியல் கல்லூரியும், 12 சுயநிதி பொறியியல் கல்லூரியும், 1 பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியும் மற்றும் 1 அரசு உதவி பெறும் தொழில்நுட்ப கல்லூரியும், 14 சுயநிதி தொழில் நுட்ப கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகள் தொகுதி மாணவர்களின் உயர்கல்வி தேவைகளை நிறைவு செய்வதால், புதிதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி துவக்க வேண்டிய அவசியம் இல்லை’’ என்றார்.

நயினார் நாகேந்திரன்: இந்த கேள்வி நமது அரசு வந்த உடன் முதல் முதலில் போடப்பட்டு அதை உடனடியாக முதல்வர் நிறைவேற்றி கொடுத்தார். அதற்கு நன்றி. ஏற்கனவே நன்றி சொல்லிட்டேன், இரண்டாம் முறை நன்றி சொல்கிறேன். அதே போல் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலுக்கு ₹30 கோடி செலவில் முதல்வர் அறிவுறுத்தல் பெயரில் அறநிலை துறை அமைச்சர் திட்டங்கள் கொடுத்துள்ளார். அதே போல் நெடுஞ்சாலை துறை அமைச்சர் முதல்வர் அறிவுறுத்தல்படி புறவழிச் சாலை வெகு விரைவில் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார். முதல்வர் ஏற்கனவே ஆதிச்சநல்லூர் ஆராய்ச்சி நிலையம் ₹18 கோடியில் திருநெல்வேலியில் அமைத்து தரப்படும் என தெரிவித்துள்ளார். இப்படி தொடர்ந்து கட்சி பாராமல் திருநெல்வேலி மாவட்டத்திற்கு திட்டங்கள் தரும் முதல்வருக்கு மனமார்ந்த நன்றி என்று பேசினார்.

முகக்கவசம் அணியாவிட்டால் மக்களுக்கு மட்டும்தான் அபராதமா: ஓபிஎஸ் கேள்வி: சட்டப்பேரவையில் நேற்று எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, ‘‘கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை கூறி, அதை தடுக்க அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்றும், அணியாவிட்டால் ₹500 அபராதம் விதிக்கப்படும் என்றும் அரசு அறிவித்தது. ஆனால், எம்எல்ஏக்கள் பெரும்பாலும் முகக்கவசம் அணியவில்லை. அபராதம் என்பது பொதுமக்களுக்கு மட்டும்தானா, எம்எல்ஏக்களுக்கு கிடையாதா?’’ என்றார்.

அதற்கு பதில் அளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ‘‘ முக கவசம் அணிய வேண்டும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், கைகளை அடிக்கடி கிருமி நாசினி கொண்டு கழுவ வேண்டும் என்று 6, 7 மாதங்களுக்கு முன்பே கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க முதல்வர் உத்தரவிட்டார். அப்போது, முக கவசம் அணியாதவர்களுக்கு ₹500 அபராதம் விதிக்கப்பட்டது. இன்றுகூட சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் அனைவருக்கும் முக கவசம் வழங்கப்பட்டுள்ளது’’ என்றார்.  தொடர்ந்து பேசிய சபாநாயகர் அப்பாவு, ‘‘எம்எல்ஏக்கள் பேசும்போது தெளிவாக பேச முடியவில்லை என்பதால்தான்  முக கவசத்தை அகற்றிவிட்டு பேசுகிறார்கள்’’ என்றார்.

முகக்கவசம் அணிந்தவர்கள் மட்டும் பேரவையில் நுழைய அனுமதி: சட்டப்பேரவையில் பணியாற்றும் அரசு ஊழியர்கள், செய்தி சேகரிக்க செல்லும் பத்திரிக்கையாளர்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து இருந்தால் மட்டும் பேரவைக்குள்ளும், பேரவை வளாகத்திற்குள்ளும் நுழைய அனுமதிக்கப்பட்டனர். மாஸ்க் அணியாமல் வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. அவர்கள் மாஸ்க் அணிந்த பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். அது மட்டுமல்லாமல் பார்வையாளர் மாடத்தில் சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை பார்க்க வந்த கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் அனைவரும் மாஸ்க் அணிந்திருந்தனர்.

Related Stories: