×

‘மன்னர் வகையறா’ படத்தின் மூலம் ரூ.1.73 கோடி மோசடி நடிகர் விமல் மீது தயாரிப்பாளர் மகள் புகார்

சென்னை: சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த உயிரிழந்த சினிமா தயாரிப்பாளர் கணேசன் மகள் ஹேமா நேற்று அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: சினிமா தயாரிப்பாளர் கணேசன் மகள் நான். எனது தந்தை இறந்துவிட்டார். சினிமாவில் தீராத ஆவல் கொண்டிருந்த எனது தந்தையை மூளை சலவை செய்து  ‘மன்னர் வகையறா’ என்ற திரைப்படத்தை துவக்கி வைத்தவர் நடிகர் விமல். படத்தின் பட்ஜெட் ரூ.5 கோடி என்றும் அதில் ரூ.1.5 கோடி மட்டும் முதலீடு செய்தால் மீதி தொகையை சினிமா உலகத்திற்குள் கடனாக பெற்று கொள்ளலாம் என்று நடிகர் விமல்  அளித்த உத்தரவாதத்தை நம்பிய எனது தந்தை சென்னைக்கு வந்து ஒரு அலுவலகத்தை வாடகைக்கு எடுத்து படம் தயாரிப்பு பணிகளை ஆரம்பித்தார்.

2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் பட்டுக்கோட்டையில் படப்பிடிப்பு துவங்கியது. 17 நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிந்திருந்த வேளையில் விமலுக்கும் கதாநாயகிக்கும் தனிப்பட்ட காரணங்களுக்காக சண்டை வர இரண்டு நாட்கள் படப்பிடிப்பு நடைபெறவில்லை.  இதனால் எனது தந்தை படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு திருப்பூருக்கு வந்துவிட்டார். சில நாட்கள் கழித்து எனது அப்பாவிடம் நானே தயாரித்து படத்தை வெளியிட்டு உங்களுக்கு கொடுக்க வேண்டிய தொகையை கொடுத்துவிடுகிறேன் என்று விமல் கூறினார். அதன்படி கடந்த 10.3.2016ம் தேதி ஒப்பந்தம் போடப்பட்டது.

அதன் பிறகு படத்தை தயாரித்து வெளியீட்டிற்கு விமல் தயாரான போது, விமலை சந்தித்து தான் முதலீடு செய்த தொகையை திருப்பி எனது தந்தை கேட்டார். அதற்கு விமலிடம் சாதகமான பதில் வராததால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் எனது தந்தை. அந்த வழக்கில் படத்தின் தொலைக்காட்சி உரிமத்திற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது. பிறகு எனது தந்தைக்கு சேரவேண்டிய பணத்தை திருப்பி தருவதாக உயர் நீதிமன்றத்தில் விமல் மனு தாக்கல் செய்தார். ஆனால் சொன்னப்படி விமல் இதுவரை பணத்தை தரவில்லை.

இதற்கிடையே 10.4.2018ம் ஆண்டு செய்து கொண்ட ஒப்பந்தப்படி படத்தின் பிற மொழி டப்பிங் உரிமைகள் என் தந்தை வசம் வந்துவிட்டது. ஆனால் என் தந்தைக்கு தெரியாமல் 21.6.2019ம் தேதி படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமையை வேறொருவருக்கு விற்று எங்களை மோசடி செய்துவிட்டார். எனவே நடிகர் விமல் மீது நடிவடிக்கை எடுத்து எங்களுக்கு சேரவேண்டிய 1 கோடியே 73 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. நடிகர் விமல் மீது ஏற்கனவே மோசடி செய்ததாக 2 தயாரிப்பாளர்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Wimal ,Mannar , Producer's daughter complains about Rs 1.73 crore scam against actor Wimal in 'Mannar Vagaiyara'
× RELATED சுறா மீன் துடுப்புகள், கடல் அட்டைகள் தீவைத்து எரிப்பு