×

திருப்புத்தூர் அருகே கண்மாயில் களைகட்டிய மீன்பிடி திருவிழா-கட்லா, ஜிலேபி அதிகளவில் சிக்கின

திருப்புத்தூர் : திருப்புத்தூர் அருகே நடந்த மீன்பிடி திருவிழாவில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் கட்லா, ஜிலேபி உள்ளிட்ட மீன்கள் அதிகளவில் சிக்கின.
தென்மாவட்ட கிராமங்களில் உள்ள கண்மாய்களில் விவசாய தேவைக்கு தண்ணீரை பயன்படுத்திய பிறகு, நீர் வற்றியதும் கிராமத்தின் சார்பில் மீன்பிடி திருவிழா நடத்துவது வழக்கம். இதில் அருகில் இருக்கும் கிராம மக்களும் கலந்து கொண்டு ஒற்றுமையாக, கண்மாயில் கிடைக்கும் மீன்களை பிடித்துச் செல்வார்கள். சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே பூலாங்குறிச்சியில் உள்ள கண்ணடி கண்மாயில் தண்ணீர் வற்றிய நிலையில் நேற்று மீன்பிடி திருவிழா நடந்தது.

இதில் பூலாங்குறிச்சி, துவார், திருக்கோளக்குடி, ஆத்திரம்பட்டி, செவ்வூர் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து சிறுவர்கள், பெரியவர்கள் என சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
பாரம்பரிய முறைப்படி மூங்கிலால் வேயப்பட்ட ஊத்தா என்ற மீன்பிடி பொருளை வைத்து போட்டி போட்டு மீன்களை பிடித்தனர். இதில் விரால், கட்லா, ஜிலேபி, கெழுத்தி, ரோகு உள்ளிட்ட மீன்கள் அதிகளவில் சிக்கின. இதனால் அப்பகுதியில் உள்ள பல கிராமங்களில் மீன் குழம்பு வாசனை மூக்கை துளைத்தது. இதேபோல் காரைக்குடி அருகே செவரக்கோட்டை நெடுவா கண்மாயிலும் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதிலும் ஏராளமான கிராமமக்கள் பங்கேற்றனர்.

Tags : Katla ,Tiruputhur , Tiruputhur: More than 2,000 people participated in the fishing festival held near Tiruputhur. This includes fish such as catfish and jellies
× RELATED வெயிலின் தாக்கத்தால் குளத்தில் செத்து மிதந்த மீன்கள்