மேட்டுப்பாளையம் பங்களா மேட்டில் நகை அடகு கடை ஷட்டரை உடைத்து கொள்ளை முயற்சி-வீடியோ வைரல்

மேட்டுப்பாளையம் :  கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பங்களாமேடு பகுதியியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர், அதே பகுதியில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல நகை அடகு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். இந்நிலையில், நேற்று அதிகாலை 2 மணிக்கு அடகு கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் இருவர், அடகு கடையில் வைத்திருந்த நகை பெட்டியை தூக்கி சென்றனர்.

அப்போது அந்த பகுதியை சேர்ந்த 2 வாலிபர்கள் சாலையில் பைக்கில் வந்தனர். இதைப்பார்த்து சுதாரித்த கொள்ளையர்கள் பெட்டியை ஓரமாக வைத்துவிட்டு நின்று கொண்டிருந்தனர்.

இதனால், சந்தேகமடைந்த பைக்கில் வந்த வாலிபர்கள், கொள்ளையர்களிடம்,  நீங்கள் யார்? என கேட்கவே அது குறித்து பதில் அளிக்காமல் திடீரென அந்த பெட்டியை அங்கேயே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.இந்த சம்பவம் அந்த நகை அடகு கடையின் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தப்பியோடிய 2 கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.இந்த கொள்ளை சம்பவத்தில் கொள்ளையர்கள் தூக்கி வந்த அந்த பெட்டியில் நகைகள் இல்லாமல் அடகு கடையில் வைக்கப்பட்டுள்ள நகைகளின் ரசீதுகள் மட்டுமே இருந்ததால் நகைகள் தப்பியது.

Related Stories: