×

லண்டன் பேச்சில் சமரசம் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சராகிறார் பிலாவல்: பிரதமர் உடனான பனிப்போருக்கு முற்றுப்புள்ளி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆட்சி மீது எதிர்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. தீர்மானம் வெற்றி பெற்றதால் இம்ரான் அரசு கலைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் (பிஎம்எல்என்) கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரருமான ஷெபாஸ் ஷெரீப் நாட்டின் 23வது பிரதமராக பதவியேற்றார். ஷெபாஸ் பாகிஸ்தானின் முக்கிய எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) உள்ளிட்ட கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்துள்ளார். இதில், பிஎம்எல்என் சார்பில் 13, பிபிபி சார்பில் 9 பேர் உள்பட 34 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

பிபிபி கட்சியின் தலைவரும், மறைந்த முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ, முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி தம்பதியின் மகனுமான பிலாவல் புட்டோ சர்தாரி வெளியுறவு அமைச்சராக பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் அமைச்சராக பதவியேற்கவில்லை. இதனால், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புக்கும் அவருக்கும் இடையே மறைமுக மோதல் போக்கு நிலவுவதாக பேச்சு அடிபட்டது. இதனிடையே, லண்டனில் உள்ள முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை சந்திக்க பிலாவல் சென்றார். அங்கு அவருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டுள்ளது. பிலாவலுடன் லண்டன் சென்றுள்ள பிபிபி கட்சியின் மூத்த தலைவரும், காஷ்மீர் மற்றும் கில்ஜித்-பல்டிஸ்தான் விவகாரத்தில் பிரதமரின் ஆலோசகருமான உமர் ஜமான் கைரா, `நவாஸ் ஷெரீப்புடன் பாகிஸ்தான் அரசியல் நிலவரம் குறித்து பிலாவல் 2 முறை ஆலோசனை நடத்தினார். அவர், இன்னும் ஓரிரு நாட்களில் வெளியுறவு அமைச்சராக பதவியேற்பார்,’ என்று தெரிவித்தார். முன்னதாக, தகவல் துறை அமைச்சர் மரியம் அவுரங்கசீப், ``பிபிபி தலைவர் பிலாவல் லண்டனில் இருந்து பாகிஸ்தான் திரும்பிய பிறகு வெளியுறவு அமைச்சராக பதவியேற்பார்,’’ என்று கூறியுள்ளார்.

ஷெபாஸ் மீதான தடை நீக்கம்: பாகிஸ்தானில் இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது., வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்ட நபர்களின் பட்டியலில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், மனைவி நஸ்ரத் ஷெபாஸ், மரியம் நவாஸ், முன்னாள் பிரதமர் ஷாகித் ககான் அபாசி, அவரது மகன் அப்துல்லா ககான், நிதி அமைச்சர் மிப்தா இஸ்மாயில் இடம் பெற்றிருந்தனர். இந்த தடையை நீக்க, புதிய அமைச்சரவையின் முதல் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி, வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்ட நபர்களின் பட்டியலில் இருந்து இவர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

Tags : London ,Pakistan ,foreign ,minister ,Bilawal ,Cold War , Bilawal to become Pakistan's foreign minister: End to Cold War with PM
× RELATED லண்டனில் நடக்கும் நிகழ்ச்சிக்கு...