×

பொன்னமராவதியில் மூடிக்கிடக்கும் பால் உற்பத்தியாளர் சங்க கட்டிடம் பயன்பாட்டுக்கு வருமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு

பொன்னமராவதி: பொன்னமராவதியில் மூடப்பட்டுள்ள பால்உற்பத்தியாளர் சங்கத்தை செயல்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் எம்எம்-255 பால்உற்பத்தியாளர் சங்கம் செயல்பட்டு வந்தது. இந்த சங்கம் மூலமாக பொன்னமராவதி மற்றும் சுற்றுப்பகுதியில் இருந்து பால் வாங்கி இந்த சங்கத்தின் மூலம் விற்பனை செய்வது, கறவை மாடுகள் வளர்ப்போருக்கு கடனுதவி வழங்குவது, கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பது, மாட்டுத்தீவனம் வழங்குவது, மாட்டுத்தீவனபுல் வழங்குவது, கறவை மாடுகள் வளர்ப்பபோருக்கு பயிற்சி அளிப்பது போன்றவை நடைபெற்று வந்தது. இந்த சங்கத்தின்கீழ் காட்டுப்பட்டி, சந்தைப்பேட்டை, புதுவளவு, பகவாண்டிபட்டி ஆகிய இடங்களில் பால்சேகரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

தனியாருக்கு குறைந்த விலைக்கு பால்கொடுத்தவர்கள் இச்சங்கம் மூலம் அரசு நிர்ணயித்த விலைக்கு கொடுத்து பயன்பெற்று வந்தனர். பொன்னமராவதி சந்தைப்பகுதியில் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வந்த சங்கத்திற்கு 1998ம் ஆண்டு புதிய கட்டிடம் கட்டப்பட்டு மிக சிறப்பாக செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 6 வருடமாக மூடப்பட்டு கிடக்கின்றது. இதனால் போதிய விலைக்கு விற்க முடியாமல் கறவை மாடுகள் வளர்ப்போர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் குறைந்த விலைக்கு பால் வாங்கும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இப்பகுதி பொதுமக்கள் நலன்கருதி மூடப்பட்டுள்ள பால்உற்பத்தியாளர் சங்கத்தை செயல்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Ponnamaravati ,Sanga Building , Will the closed Milk Producers' Association building in Ponnamaravathi come into use? Farmers expect
× RELATED பொன்னமராவதி குப்பைக் கிடங்கில்...