×

தென்னை மரம் ஏறும் தொழிலாளர்கள் தட்டுப்பாடு-திருப்புவனம் பகுதி விவசாயிகள் தவிப்பு

திருப்புவனம் : திருப்புவனம் பகுதியில் தென்னை மரங்களில் இருந்து தேங்காய் வெட்ட போதிய ஆட்கள் கிடைக்காததால் விவசாயிகள் பெரிதும் தவிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம், திருப்பாச்சேத்தி, மடப்புரம், சிங்கம்புணரி உள்ளிட்ட பகுதிகளில் தென்னை விவசாயம் பெருமளவு நடைபெறுகிறது. தென்னை மரங்களில் இருந்து 45 நாட்கள் முதல் 60 நாட்களுக்கு ஒரு முறை தேங்காய்கள் வெட்டப்படும். ஒரு மரத்திற்கு 20 முதல் 50 தேங்காய் வரை கிடைக்கும்.

திருப்புவனம் பகுதிகளில் சுமார் ஒன்றரை லட்சம் தென்னை மரங்கள் உள்ளன. இப்பகுதியில் நெட்டை மரங்களே அதிகளவு வளர்க்கப்படுகிறது. தேங்காய்கள் வெட்ட வத்ராயிருப்பு, பேரையூர், பாப்பான்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மரம் ஏறும் தொழிலாளர்கள் அதிகளவு வருகை தருவர். ஒரு மேஸ்திரி தலைமையில் 15 முதல் 30 பேர் கொண்ட குழு தேங்காய்கள் வெட்டும். ஆண்கள் தேங்காய்கள் வெட்ட, பெண்கள் அதனை தலைச்சுமையாக ஒரு இடத்தில் குவிப்பார்கள். ஒரு மரத்திற்கு தேங்காய் வெட்ட ஆரம்ப காலகட்டத்தில் ரூ.5ல் தொடங்கி தற்போது ரூ.20 வரை விவசாயிகள் வழங்குகின்றனர். நாள் ஒன்றுக்கு ஒரு குழு 1000 மரங்கள் வரை வெட்டுவார்கள்.

தேங்காய்கள் வெட்டும் தொழிலாளர்கள் வெளிமாவட்டங்களில் இருந்துதான் அதிகளவு வருகின்றனர். தற்போது கோடை காலம் என்பதால் நுங்கு, பதனீர் உள்ளிட்டவற்றிற்கு வரவேற்பு அதிகம் உள்ளது. மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் பனை மரங்கள் அதிகம் என்பதால் கூலி ஆட்கள் அந்த பகுதிகளுக்கு சென்று விட்டதால் தேங்காய்கள் வெட்ட ஆட்கள் கிடைக்கவில்லை. தென்னை மரங்களை காட்டிலும் பனை மரங்களில் வெட்ட கூலி அதிகம், மரங்களும் உயரம் குறைவு என்பதால் கூலி ஆட்கள் அங்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் திருப்புவனம் பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக தேங்காய்கள் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது.

60 நாட்களுக்கு ஒரு முறை வெட்டப்பட வேண்டிய தேங்காய்கள் தற்போது 99 நாட்கள் கடந்து வெட்டப்படுவதால் விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. வேளாண் துறை சார்பில் நவீன இயந்திரம் உள்ளிட்டவைகள் அறிமுகப்படுத்தப்பட்டாலும், செயல்பாட்டிற்கு வராததால் இப்பகுதி தென்னை விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மதுரையை மையப்படுத்தி தென்னை சார்ந்த தொழில்களுக்கு பயிற்சி மையம், கொள்முதல் மையம் உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டால் இதற்கு நிரந்தர தீர்வு காணலாம் என தென்னை விவசாய சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Turnaround: Farmers in the turnout area are largely unable to find enough people to cut coconuts from the coconut trees.
× RELATED கொடைக்கானல் சுற்றுலா தலங்களுக்கு...