×

காட்சி பொருளான மின்வேலிகள்: ஊருக்குள் படையெடுக்கும் வனவிலங்குகள்: களக்காடு விவசாயிகள் தவிப்பு

களக்காடு: களக்காடு சுற்றுவட்டாரத்தில் மின்வேலிகள் காட்சி பொருளாக தென்படுவதால், வனவிலங்குகள் ஊருக்குள் படையெடுத்து வருகின்றன. அடிக்கடி பயிர்களை சேதப்படுத்தி வருவதால், வருவாய் இழப்பை எதிர்கொள்ளும் விவசாயிகள், உரிய நிவாரணமும் இன்றி திண்டாடுகின்றனர். தமிழகத்தின் முதல் புலிகள் சரணாலயமாக களக்காடு - முண்டந்துறை புலிகள் சரணாலயம் 1988ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் செயல்பட்டு வரும் புலிகள் காப்பகத்தில் அரியவகை  வனவிலங்குகள் காணப்படுகின்றன. இங்கு வாழும் புலி, சிறுத்தை, கரடி, யானை, செந்நாய்கள், கடமான், பன்றிகள் அடிக்கடி மலையடிவார கிராமங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை துவம்சம் செய்து வருகின்றன. தற்போது கோடைகாலம் தொடங்கியுள்ளதால் வனப்பகுதியில் தகிக்கும் வெப்பத்தில் இருந்து தப்பிக்கவும், குடிநீருக்காகவும், உணவுக்காகவும் இடம் பெயரும் வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. தலையணை மலையடிவாரத்தில் சிறுத்தைகளும், கீழவடகரை கிராமத்தில் கரடிகளும் ஊருக்குள் புகுந்து விவசாயிகளை அச்சுறுத்தி வருகின்றன. சிறுத்தைகள் நாய்களை வேட்டையாடியும், கரடிகள் வாழைகளை நாசம் செய்தும் வருகின்றன. இதனால் விவசாயிகள் கடும் பீதியில் உள்ளனர். பகலில் கூட விளைநிலங்களுக்கு தனியாக செல்ல அச்சப்படுகின்றனர். இதுதவிர திருக்குறுங்குடி, மலையடிபுதூர், மாவடி, சாலைப்புதூர், சிதம்பரபுரம், மஞ்சுவிளை, கீழவடகரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடமான், காட்டு பன்றிகளும் தன் பங்கிற்கு பயிர்களை நாசம் செய்து விவசாயிகளை கண்ணீர் சிந்த வைக்கின்றன

தினமும் வனவிலங்குகளுடன் மல்லு கட்ட வேண்டியதிருப்பதால் விவசாயிகள் கடும் அவதிபட்டு வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விவசாயிகளின் தொடர் போராட்டத்தின் விளைவாக மலையடிவாரத்தில் வனத்துறை சார்பில் சூரியஒளியில் இயங்கும் (சோலார்) மின்வேலி அமைக்கப்பட்டது. அப்போது வனவிலங்குகள் ஊருக்குள் வருவது ஓரளவிற்கு கட்டுக்குள் இருந்து வந்தது. ஆனால் அந்த வேலியோ நாளடைவில் செயல் இழந்து விட்டது. பல கி.மீ.தூரத்திற்கு அமைக்கப்பட்ட மின்வேலிகள் பராமரிப்பு இல்லாமல் பயனற்று போய் விட்டதாகவும், அதனால் வனவிலங்குகள் எளிதில் ஊருக்குள் நுழைவதாகவும் கூறப்படுகிறது. மின்வேலிகளை சுற்றி செடி, கொடிகள் முளைத்துள்ளன. பல இடங்களில் மின்வேலிகளில் உள்ள வயர்கள் அறுந்து கிடக்கின்றன. கம்பிகளும் சாய்ந்த நிலையில் உள்ளது. பேட்டரிகளும் மாயமாகியுள்ளது. இவ்வாறு மின் வேலிகள் காட்சி பொருளாகி விட்டதால் வனவிலங்குகள் ஊருக்குள் படையெடுப்பதை கட்டுப்படுத்துவதில் தடை எழுந்துள்ளதாக கூறப்படுகிறது இதுபோல மலையடிவாரத்தில் அகழியும் தோண்டப்பட்டது. அந்த அகழியும் பராமரிப்பு இல்லாமல் தூர்ந்து காணப்படுகிறது.  இதுபற்றி தமிழ்நாடு விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் முருகன் கூறுகையில், ‘‘பொதுவாக கோடை காலத்தில் வனவிலங்குகள் ஊருக்குள் புகுவது அதிகரிக்கும். அதனை கருத்தில் கொண்டு வனத்துறையினர் மின்வேலிகள் பராமரிப்பு உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது வழக்கம். சமீபகாலமாக இந்த நடைமுறை கைவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. கடந்த சில ஆண்டுகளாக மின் வேலிகள் பராமரிக்கப்படவில்லை. களக்காடு பகுதியை பொறுத்தவரை விவசாயம் தான் பிரதான தொழில் ஆகும். விவசாயத்தை நம்பியே பொதுமக்கள் பிழைப்பு நடத்தி வருகின்றனர். இரவு பகலாக விளைநிலங்களில் பாடுபட்டு வருகின்றனர். வட்டிக்கு கடன் பெற்றும், நகைகளை அடகு வைத்தும் விவசாயத்தில் முதலீடு செய்கின்றனர்.

இந்நிலையில் வனவிலங்குகள் பயிர்களை நாசப்படுத்துவதால் விவசாயிகளுக்கு பெருமளவில் இழப்பு ஏற்படுவதுடன் வாழ்வாதாரத்தையும் இழந்து தவித்து வருகின்றனர். வனவிலங்குகள் அட்டகாசத்தால் நகைகளை மீட்க முடியாமலும், கடன்களை செலுத்த முடியாமலும் துன்பத்தில் துவண்டு வருகின்றனர் என்றார். அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட தலைவர் பாலன் கூறும் போது, வனவிலங்குகள் சேதப்படுத்தும் பயிர்களுக்கு இழப்பீடு வழங்க அரசு நிதிஒதுக்கீடு செய்து வருகிறது. ஆனால் களக்காடு பகுதியில் வனவிலங்குகள் சேதப்படுத்தும் பயிர்களுக்கு வனத்துறையினர் இதுவரை இழப்பீடு எதுவும் வழங்கவில்லை. இழப்பீடு கேட்டு விண்ணப்பித்தால் நடைமுறைக்கு ஒத்துவராத விதிகளை காரணம் காட்டி மனுக்களை தள்ளுபடி செய்து விடுகின்றனர். களக்காடு மலையடிவார பகுதிகளில் மடங்களுக்கு சொந்தமான நிலங்கள் ஏராளமாக உள்ளன. இவைகளை குத்தகைக்கு எடுத்து தான் விவசாயம் செய்து வருகின்றனர். இதை காரணம் காட்டியே வனத்துறையினர் இழப்பீடு வழங்க மறுத்து வருகின்றனர். எனவே பயிர்களை அழிவில் இருந்து காப்பாற்ற வனவிலங்குகள் ஊருக்குள் புகுவதை கட்டுப்படுத்த சோலார் மின்வேலிகளை பராமரிக்க வேண்டும் வனவிலங்குகளால் நாசமாகும் பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.


Tags : Nuru , Visual object, Wildlife Kalakadu, farmers suffering
× RELATED கலை பண்பாட்டுத்துறை வழங்கும் நம்ம ஊரு...