×

ஸ்ரீ கரிகிருஷ்ண பெருமாள் ஆலயத்தில் ஹரிஹரன் திருவிழா: ஏராளமானோர் பங்கேற்பு

பொன்னேரி:  பொன்னேரியில் உள்ள திருவாயர்பாடியில் உள்ளது ஸ்ரீ கரிகிருஷ்ண பெருமாள். ஆலயம். இங்கு, சித்திரை பிரம்மோற்சவ விழா கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனையொட்டி, கரிகிருஷ்ண பெருமாள் தினந்தோறும் அனுமந்த, புன்ன, அன்ன வாகனத்தில் திருவீதி உலா நிகழ்த்தி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான ஹரிஹரன் சந்திப்பு பெருவிழா நேற்று அதிகாலை நடைபெற்றது.

ஒரு காலகட்டத்தில் வைணவம் பெரிதா அல்லது சைவம் பெரிதா என்ற சமய மோதல் வெடித்து உச்சத்தில் இருந்தது.  இதனால் மிகுந்த கவலையுற்ற பரத்வாஜ முனிவரும், அகத்திய மாமுனியும் இந்த பிரச்னைக்கு தீர்வு காண ஹரியும் ஹரனும் ஒன்றே என்பதை பக்தர்களுக்கு எடுத்துரைக்க தங்கள் முன் ஒன்றாக காட்சியளிக்க வேண்டி, இரு முனிவர்களும் கடும் தவமிருந்தனர். அதன் பயனாக அவர்கள் கண் முன்பு பெருமாளும், சிவனும் ஒன்றாக காட்சியளித்ததாக வரலாறு உள்ளது. கொரோனா பரவல் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த திருவிழா ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது பிரமோற்சவ திருவிழா, இந்த ஆண்டு விமரிசையாக நடைபெற்றது.

கரிகிருஷ்ண பெருமாளுள் மற்றும்  அகதீஸ்வரரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளும் ஹரி ஹரன் சந்திப்பு திருவிழாவையொட்டி, திருவாயற்பாடியில் உள்ள தனது ஆலயத்திலிருந்து நள்ளிரவு சவுந்தர்யவள்ளி தாயாருடன் கருட வாகனத்தில் மேளதாளம் முழங்க  வானவேடிக்கையுடன் கரிகிருஷ்ண பெருமாள் பிரதான மாடவீதிக்கு வந்தடைந்தார். அதே நேரத்தில் விநாயகர், முருகன் மற்றும் பஞ்சமூர்த்திகளுடன் ஆனந்தவள்ளி தாயார் சகிதமாக சிவபெருமான் ஆலயத்திலிருந்து மேளதாளம் முழங்க பக்தர்கள் புடைசூழ பிரதான மாடவீதியை வந்தடைந்தார்.

இந்நிலையில், அங்கு மூன்று முறை முன்னும் பின்னுமாக ஒடியாடி விளையாடிய ஹரியும் ஹரனும் அதிகாலை சரியாக 6 மணிக்கு நேருக்கு நேர் வந்து சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது விண்ணை தொடும் அளவிற்கு வான வேடிக்கைகள் நடத்தப்பட்டன. பக்தர்கள் பாம்பு சீறிய பட்டாசை கண்டும் பரவசம் அடைந்தனர். தமிழகத்தில் வேறெங்கும் நடைபெறாத முக்கிய நிகழ்வான ஹரிஹரன் சந்திப்பை காண மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிருந்தும் திரளான பக்தர்கள் ஹரியும் ஹரனையும் சந்தித்து ஆசி பெற்றனர். அந்த நேரத்தில் அங்கு கூடியிருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கோவிந்தா, கோவிந்தா எனவும் ஓம் நமோ நாராயணா, ஒம் நமச்சிவாயா என்றழைத்த கோஷம் விண்ணை பிளந்தது. சந்திப்போற்சவ... வைபவம் முடிந்ததும் சிவனும் பெருமாளும் தத்தமது ஆலயம் திரும்பினர்.

Tags : Hariharan Festival ,Sri Karikirishna Permal Temple , Sri Karikrishna Perumal Temple, Hariharan Festival, Devotees
× RELATED ஸ்ரீ கரிகிருஷ்ண பெருமாள் ஆலயத்தில்...