×

திருமங்கலம் அருகே நள்ளிரவில் பரபரப்பு டோல்கேட்டில் துப்பாக்கியை காட்டி ஊழியர்களை மிரட்டிய 3 பேர் கைது: 2 துப்பாக்கிகள், கார் பறிமுதல்

திருமங்கலம்: திருமங்கலம் அருகே கப்பலூர் டோல்கேட்டில் நள்ளிரவில் துப்பாக்கியை காட்டி ஊழியர்களை மிரட்டிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் வந்த கார், துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. தென்காசி மாவட்டம், சுரண்டை, சிவகுருநாதபுரத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் (32). விவசாயப்பண்ணை வைத்துள்ளார். இவர் தனது துப்பாக்கிக்கு தோட்டாக்கள் வாங்குவதற்காக, நேற்று முன்தினம் காரில் நண்பர்கள் முத்துக்குமார் (34), பால் வியாபாரி பொன்னுராஜ் (28) ஆகியோரை அழைத்துக் கொண்டு, சுரண்டையிலிருந்து மதுரைக்கு புறப்பட்டு வந்தார். காரை பொன்னுராஜ் ஓட்டி வந்தார்.

இரவு 11.20 மணியளவில் கார், மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கப்பலூர் டோல்கேட்டின் 4வது பாதையில் நின்றது. அவர்களிடம், காரை பின்னால் எடுத்து நிறுத்தும்படி ஊழியர்கள் கூறியுள்ளனர். இதற்கு, ‘‘காரை எடுக்க முடியாது’’ என ஊழியர்களுடன் பொன்ராஜ் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அருகே அமர்ந்திருந்த ஜெயக்குமார், திடீரென தனது துப்பாக்கியை எடுத்து ஊழியர்களை மிரட்டியுள்ளார். பின்னர் கட்டணம் செலுத்தி விட்டு காரை எடுத்துக் கொண்டு மதுரை நோக்கி சென்றனர். அப்போது உடன் வந்த முத்துக்குமார், ‘‘துப்பாக்கியை காட்டி, டோல்கேட் ஊழியர்களை மிரட்டியது தவறு’’ என கூறினார். அதிர்ச்சியடைந்த ஜெயக்குமார் காரை கப்பலூர் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் நிறுத்துமாறு கூறினார். இதற்கிடையில் துப்பாக்கியை காட்டி மிரட்டியது தொடர்பாக டோல்கேட் ஊழியர்கள், திருமங்கலம் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

 போலீசார் டோல்கேட் சென்று விசாரணை நடத்தி, அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவை ஆய்வு செய்தனர். வாகன பதிவெண்ணை கொண்டு மாவட்டம் முழுவதும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அப்போது கப்பலூர் பெட்ரோல் பங்க்கில் கார் நிற்பதை கண்டு, பொன்ராஜ், முத்துக்குமார், ஜெயக்குமாரை கைது செய்து, திருமங்கலம் டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். கார், 2 துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்தனர். விசாரணையில் 3 பேரும் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது.மேலும், ஜெயக்குமார் தனது அண்ணன் மகளுக்கு துப்பாக்கி பயிற்சி கொடுக்க தோட்டா வாங்க மதுரைக்கு சென்றதாகவும், டோல்கேட்டில் ஊழியர்கள் அலைக்கழித்ததால் துப்பாக்கியை காட்டி மிரட்டியதாகவும் தெரிவித்தார். இந்த சம்பவம் திருமங்கலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டாவது சம்பவம்
கப்பலூர் டோல்கேட்டில் ஊழியர்களை துப்பாக்கியை காட்டி மிரட்டியது 2வது சம்பவமாகும். இதேபோல் 2 ஆண்டுக்கு முன்பு, நெல்லையில் நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு, திருச்சியை நோக்கி சென்ற சிலர், கப்பலூர் டோல்கேட்டில் சுங்கக்கட்டணம் செலுத்த மறுத்து துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

நடந்தது என்ன?
கப்பலூர் டோல்கேட் மேனேஜர் ராஜா, திருமங்கலம் டவுன் போலீசில் கொடுத்த புகாரில், ‘‘நேற்று முன்தினம் இரவு நான், சக ஊழியர்கள் நாகராஜ், தினேஷ், முருகன், மாரிச்சாமி ஆகியோர் பணியில் இருந்தோம். இரவு 11.20 மணியளவில் திருமங்கலம் பகுதியிலிருந்து மதுரை செல்லும் பாதையில் காரில் வந்தவர்கள் வழித்தடம் 4ல் நுழைந்தனர். சுங்கப்பணம் கேட்டபோது, தகராறில் ஈடுபட்டு ஒருவர் பிஸ்டல் துப்பாக்கியும், மற்றொருவர் நீளமான துப்பாக்கியையும் காட்டி  சுடுவது போல் மிரட்டினர். உடனே ஊழியர்கள் அனைவரும் வந்து காரை மறிக்கவே, சுங்க கட்டணத்திற்கான தொகையை கொடுத்துவிட்டு, ‘‘மீண்டும் வருவோம்’’ என எங்களை மிரட்டி, தகாத வார்த்தைகளால் பேசி விட்டு சென்று விட்டனர்’’ என கூறியுள்ளார்.

Tags : Tolkate ,Thirmanangalam , Wedding, tollgate, gun, staff, arrest, Car confiscation
× RELATED ‘குருப் 1ல் பாஸ்…. டிஎஸ்பி ஆகிட்டேன்’...