×

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு தாய்கோ வங்கி கடன் அறிவிக்கப்பட்ட ஓராண்டுக்குள் புதிய தொழிற்பேட்டைகள் பயன்பாட்டுக்கு வருவது இதுவே முதல்முறை: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு

சென்னை:  தமிழக சட்டப் பேரவையில் நேற்று குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மானியக் கோரிக்ைக மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது:

தொழில் கூட்டுறவு சங்கங்களுக்கு தனிப்பட்ட முறையில் கடன் உதவி அளிப்பதற்கு 1961ல் தொடங்கப்பட்ட தாய்கோ வங்கி 47 கிளைகளுடன் செயல்படுகிறது. வங்கியில் நகை கடன்களும், நில அடமான கடன்களும் மட்டுமே வழங்கப்பட்டது. இதனை முதல்வர் கவனத்துக்கு  கொண்டு சென்று, அதிக அளவில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 இதனை செயல்படுத்தும் விதமாக, தாய்கோ வங்கியும், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகமும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன. கடந்த ஆண்டில் தாய்கோ வங்கி ரூ.12 கோடி லாபம் ஈட்டியுள்ளது. தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளிலும் சீரான தொழில் வளர்ச்சியை ஏற்படுத்திட 1970ம் ஆண்டு கலைஞரால் அனைத்து பகுதிகளிலும் சிட்கோ தொழிற்பேட்டைகள் உருவாக்கப்பட்டது. இன்று தமிழகம் முழுவதும் 127 தொழிற்பேட்டைகளில் 9 ஆயிரத்து 938 தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் 1 லட்சத்து 62 ஆயிரத்து 467 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

 கடந்த ஆண்டு செங்கல்பட்டு மாவட்டம்  கொடூர், மதுரை மாவட்டம்  சக்கிமங்கலம், திருச்சி மாவட்டம்  மணப்பாறை, திருவள்ளூர் மாவட்டம் காவேரிராஜபுரம் ஆகிய 4 இடங்களில் அறிவிக்கப்பட்ட தொழிற்பேட்டைகளுக்கு நிலம் எடுக்கும் பணி முடியும் தருவாயில் உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் முடிக்கப்பட்டு தொழில் முனைவோருக்கு மனைகள் ஒதுக்கீடு செய்யப்படும். அறிவிக்கப்பட்ட ஓர் ஆண்டுக்குள், புதிய தொழிற்பேட்டைகள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது இதுவே முதல் முறையாகும்.

கோவை மாவட்டம், கிட்டம்பாளையம்-அறிஞர் அண்ணா தொழிற் கூட்டுறவு தொழிற்பேட்டை மற்றும் சொலவம்பாளையத்தில் உள்ள கொசிமா தொழிற்பேட்டை ஆகிய இடங்களில் புதிய தனியார் தொழிற்பேட்டைகள் அமைக்க ரூ.43 கோடி மொத்த திட்ட மதிப்பீட்டில் ரூ.19 கோடி அரசு மானியமாக வழங்கப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. தொழிலாளர்கள் வெளியே தங்கி வேலை செய்யும் சிரமத்தை அறிந்த முதல்வர், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் 800 தொழிலாளர்களுக்கும், கோவை மாவட்டம், குறிச்சி தொழிற்பேட்டையில் 500 தொழிலாளர்களுக்கும், குறைந்த வாடகையில் தங்குவதற்கான விடுதிகளை ரூ.51 கோடியே 47 லட்சம் மதிப்பீட்டில் கட்டுவதற்கு உத்தரவிட்டு பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

  சிட்கோவின் 60 தொழிற்பேட்டைகளில் 3 ஆயிரத்து 702 ஏக்கர் நிலம் அரசு புறம்போக்கு நிலங்களாக இருப்பதால் தொழில் மனைகளுக்கு பட்டா வழங்க இயலாத நிலையில் உள்ளது. இந்த நிலங்களை பட்டா வழங்கும் வகையில் நில வகைப்பாடு மாற்றம் செய்திட தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவால் கிண்டி, அம்பத்தூர் உள்ளிட்ட 23 தொழிற்பேட்டைகளில் 1,314 ஏக்கர் நிலங்களுக்கு, நில வகைப்பாடு மாற்றம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. விரைவில்  அரசாணை வெளியிடப்பட்டு தொழில் மனைகளுக்கு பட்டா வழங்கப்படும்.   கோவை மாவட்டம்-வெள்ளலூரில் வார்ப்பு குழுமம், மதுக்கரையில் பொறியியல் குழுமம், வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் தீப்பெட்டி குழுமம் ஆகிய 3 குழுமங்களுக்கு மானியமாக ரூ. 7 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொது உற்பத்தி மையங்களுக்கான பணிகள் தொடங்கப்பட உள்ளன.

மாநிலம் முழுவதும் பரவலாக உள்ள குறுந்தொழில் நிறுவன குழுமங்களுக்கு உதவிடும் வகையில் ரூ.50 கோடி நிதி ஒதுக்கீட்டில் “குறு நிறுவனக் குழும மேம்பாட்டுத் திட்டம்” ஏற்படுத்தப்படும் என நடப்பு நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், காஞ்சிபுரம் மாவட்டத்தில் நரிக்குறவர் செய்யும் செயற்கை நகைகள் குழுமமும், திருநெல்வேலி மாவட்டத்தில் பாத்திரங்கள் செய்யும் குழுமமும், கடலூர் மாவட்டத்தில் முந்திரி பதப்படுத்தும் குழுமமும், மதுரை மாவட்டத்தில் பொம்மை செய்யும் குழுமம் உள்ளிட்ட 20 குறு நிறுவன குழுமங்கள் இந்த ஆண்டு நிறுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம், திருமுடிவாக்கம் தொழிற்பேட்டையில், துல்லிய  உற்பத்தி  பெருங் குழுமம் மற்றும் திண்டிவனத்தில் மருந்தியல் பெருங்குழுமம் ஆகிய குழுமங்கள் ரூ. 198 கோடி மதிப்பில் அமைப்பதற்கு நிலம் கண்டறியப்பட்டு நடவடிக்கையில் உள்ளது. டான்சியில் அரசு துறைகளின் பணி ஆணைகளை தவிர்த்து, கடந்த நிதியாண்டில் முதன் முறையாக ரூ.2 கோடி மதிப்பிற்கு தனியார் நிறுவனங்களிடமிருந்து பணி ஆணைகளை பெற்றுள்ளது. டான்சியின் 19 உற்பத்தி தொழிற் கூடங்கள் ரூ.5 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்டுள்ளது கடந்த 10 ஆண்டுகளில் இதுவே முதன்முறையாகும். மேலும், மூடப்பட்ட ஓமலூர் மற்றும் ராணிப்பேட்டை தொழிற்கூடங்கள் மீண்டும் திறக்கப்பட்டு, உற்பத்தியை தொடங்கி உள்ளன.

 திராவிட மாடல் ஆட்சி என்பதற்கு எடுத்துக் காட்டாக சமூக நீதியும், சமச்சீர் வளச்சியுமே திமுக அரசின் கொள்கை. அதனை ஒவ்வொரு திட்டத்திலும் முன்னெடுத்து வரும் முதல்வர், பட்டியல் இனத்தவரும் புதிய தொழில் முனைவோர்களாக உருவாக வேண்டும் என்பதில் தனிக்கவனம் செலுத்தி வருகிறார். சுயவேலைவாய்ப்பு திட்டங்களின் கீழ் 1071 பட்டியல் இனத்தவர்களுக்கும், 673 சிறுபான்மையினர் இனத்தவர்களுக்கும், 3389 மகளிருக்கும் ரூ.143 கோடியே 67 லட்சம் மானியம் வழங்கப்பட்டு இந்த அரசால் புதிய தொழில் முனைவோர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர். இவை மட்டும் அல்லாமல் பட்டியல் இனத்தவர்கள் புத்தொழில் தொடங்க தேவையான பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகள் வழங்க நடப்பு நிதியாண்டில் ரூ.30 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களின் கொள்முதல்களில் தமிழ்நாட்டை சார்ந்த பட்டியல் இன புத்தொழில் முனைவோரின் தயாரிப்புகளுக்கு 5 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இத்துறையை முதல்வர் வழிகாட்டுதலின் படி, இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக கொண்டு வர பாடுபடுவோம்.  இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Taico Bank ,Minister ,Thamo Anparasan , Businesses, Taigo Bank Credit, New Industrial Estates, Minister Thamo Anparasan
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...