×

10 படங்கள் தயாரிக்கும் இயக்குனர் சங்கம்

சென்னை: தமிழ்நாடு இயக்குனர்கள் சங்கம் பெங்களூருவை சேர்ந்த இனோவேட்டிவ் பிலிம் அகாடமியுடன் இணைந்து 10 படங்களை தயாரிக்கிறது. இதனை இயக்குனர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் இயக்குகிறார்கள். இதற்கான அறிமுக விழா நேற்று நடந்தது. விழாவில் பெப்சி மற்றும் இயக்குனர்கள் சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணி பேசியதாவது: இயக்குனர்கள் சங்கத்தில் 2500 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்களில் திறமையானவர்களை கண்டறிந்து அவர்களுக்கு பட வாய்ப்பு பெற்றுத் தரும் முயற்சியாக பெங்களூரு இனோவேட்டிங் பிலிம் அகாடமியுடன் இணைந்து செயலாற்றி வருகிறோம்.

முதல்கட்டமாக 195 கதைகள் கேட்கப்பட்டு அதில் 52 கதைகள் படமாக்க தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இதில் 10 கதைகள் முதல்கட்டமாக படமாக்கப்பட இருக்கிறது. படிப்படியாக மற்ற படங்களும் தயாராகும். 40 சதவிகிதம் சம்பளமாகவும், 60 சதவிகிதம் படத் தயாரிப்புக்கும் செலவிட வேண்டும் என்றும், குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் படத்தை முடித்துக் கொடுக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்திருக்கிறோம். இயக்குனர் சங்கம் தவிர தமிழ் சினிமாவில் உள்ள மற்ற சங்கத்தில் உள்ள திறமையானவர்களை ஊக்குவிக்கும் வகையில் குறும்பட போட்டி ஒன்றை நடத்துகிறோம். இந்த போட்டியில் மற்ற சங்க உறுப்பினர்கள் ஒரு குழுவாக இணைந்து ஒரு குறும்படத்தை இயக்கி தரவேண்டும். இதில் இயக்குனர் சங்க உறுப்பினர்களும் கலந்து கொள்ளலாம். குறும்படம் தயாரிப்புக்கு தேவையான கேமரா உள்ளிட்ட உபகரணங்கள், மற்றும் நிதி சங்கத்தின் சார்பில் அளிக்கப்படும்.

இந்த படங்களை கொண்டு ஒரு குறும்பட விழாவை நடத்துகிறோம். முன்னாள் நீதிபதி வள்ளிநாயகம், நடிகர் நாசர், நடிகை அர்ச்சனா, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், எடிட்டர் லெனின் ஆகியோர் நடுவர்களாக இருந்து பரிசுக்குரிய குறும்படங்களை தேர்வு செய்வார்கள். இதில் தேர்வாகும் முதல் 3 படங்களை திரைப்படமாக தயாரிப்போம். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி ராமசாமி, செயலாளர் மன்னன், நடப்பு தயாரிப்பாளர் சங்க செயலாளர் டி.சிவா, இயக்குனர்கள் சங்க செயலாளர் ஆர்.வி.உதயகுமார், பொருளாளர் பேரரசு, துணை தலைவர் ரவிமரியா, பெங்களூரு இனோவேட்டிவ் பிலிம் அகாடமி தலைவர் சரவண பிரசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : 10 Film Production Directors Association , 10 Film Production Directors Association
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...