×

அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.76 லட்சம் மோசடி மாஜி அமைச்சர் சரோஜா கணவருடன் கோர்ட்டில் சரண்: வாரந்தோறும் பொருளாதார குற்றப்பிரிவில் கையெழுத்திட உத்தரவு

ராசிபுரம்: அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.76 லட்சம் மோசடி செய்த வழக்கில், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, முன்னாள் அமைச்சர் சரோஜா கணவருடன் நேற்று ராசிபுரம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். வாரந்தோறும் நாமக்கல் பொருளாதார குற்றப்பிரிவில் கையெழுத்திடும்படி அவருக்கு நிபந்தனை விதித்து முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தைச் சேர்ந்தவர் முன்னாள் அமைச்சர் சரோஜா. இவர், கடந்த 2016ல் ராசிபுரம் தொகுதியில்  வெற்றி பெற்று ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில், சமூக நலத்துறை அமைச்சராக இருந்தார். 2021ல் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.   

இந்நிலையில், இவர் அமைச்சராக இருந்தபோது, அரசு வேலை வாங்கித்தருவதாக லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக பல்வேறு புகார்கள் எழுந்தது. இதனிடையே, ராசிபுரத்தை சேர்ந்த சரோஜாவின் உறவினரான குணசீலன் என்பவர், நாமக்கல் குற்றப்பிரிவு போலீசாரிடம் அளித்த புகாரில், ‘‘சத்துணவு அமைப்பாளர் பணி நியமனத்திற்காக, பல்வேறு நபர்களிடமிருந்து ரூ.76 லட்சத்து 50 ஆயிரம் வசூலித்து, முன்னாள் அமைச்சர் சரோஜா மற்றும் அவரது கணவர் லோகரஞ்சனிடம் வழங்கினேன். ஆனால், பணி வழங்கவில்லை. எனவே, மோசடி செய்த அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்று தெரிவித்திருந்தார்.

இதன் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், போலீசார் தங்களை கைது செய்யக்கூடும் என கருதிய சரோஜாவும், அவரது கணவரும் முன்ஜாமீன் கேட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இருவரும் வாரம் 2 முறை விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக வேண்டும், உரிய நாளில் வழக்கு நடக்கும் நீதிமன்றத்தில் சரண் அடைந்து முன்ஜாமீன் பெற்றுக்கொள்ளும்படி நீதிபதி ஜெகதீஷ் சந்திரா  உத்தரவிட்டார். இந்நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, முன்னாள் அமைச்சர் சரோஜா மற்றும் அவரது கணவர் லோகரஞ்சன் ஆகியோர், நேற்று ராசிபுரம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். அப்போது, முன்ஜாமீன் வைப்புத்தொகையாக ரூ.25 லட்சம் செலுத்த வேண்டும், வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நாமக்கல் பொருளாதார குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என நீதிபதி ரெஹனாபேகம் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து, வைப்புத்தொகையான ரூ.25 லட்சத்தை முன்னாள் அமைச்சர் சரோஜா செலுத்திவிட்டு சென்றார்.

Tags : Maj. minister ,Saroja , Former minister Saroja's husband surrenders in court for allegedly embezzling Rs 76 lakh from government jobs: Order to sign weekly economic offenses.
× RELATED சிவகாசி அருகே பட்டாசு ஆலை விபத்து : பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு!!