×

‘களவாணி-2’ எங்கள் பேனரில் தயாரிப்பதாக கூறி நடிகர் விமல் ரூ.5 கோடி மோசடி: கமிஷனர் அலுவலகத்தில் சினிமா தயாரிப்பாளர் புகார்

சென்னை: ‘களவாணி-2’ எங்கள் பேனரில் தயாரிப்பதாக கூறி ரூ.5 கோடி பணம் பெற்று மோசடி செய்து விட்டதாக நடிகர் விமல் மீது சினிமா தயாரிப்பாளர் ஒருவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சினிமா தயாரிப்பாளர் பெரவள்ளூரை சேர்ந்த கோபி (43) நேற்று அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நான் கப்பல் துறை சார்ந்த தொழில் செய்து வருகிறேன். மேலும், அரசு பிலிம்ஸ் என்ற பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனம் தொடங்கி திரைத்துறையில் ஈடுபட்டு வருகிறேன்.

கடந்த 2016 ஏப்ரல் 12ம் தேதி நடிகர் விமல் என்னை அணுகி ‘மன்னர் வகையறா’ என்ற திரைப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும், அதில் தானே கதாநாயகனாக நடிக்க இருப்பதாகவும், அப்படத்திற்கு பணம் கொடுத்து உதவும்படியும் கோரினார். மேலும், படத்தின் லாபத்திற்கான பங்கையும் கொடுப்பதாக உறுதி அளித்தார். அதற்கு நான், சற்று தயங்கியதும், ‘களவாணி-2’ படத்தை எங்கள் பேனரில் தயாரிக்க உத்தரவாதம் அளித்தார். அதன் பேரில் நான் அவருக்கு வங்கி கணக்கிலும், ரொக்கமாகவும் ரூ.5 கோடி கொடுத்தேன். வாங்கிய பணத்தை படம் வெளியீட்டுக்கு முன்பே கொடுப்பதாக உறுதியளித்தார். ஆனால் அவர் பணம் கொடுக்கவில்லை.

பின்னர் பல்வேறு பேச்சுவார்த்தைக்கு பிறகு ரூ.1.30 கோடி வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. அப்போது நடிகர் விமல் படத்திற்கான லாபத்தொகையாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார். அசல் ரூ.5 கோடி பிறகு திருப்பி தருவதாக உறுதி அளித்தார். ஆனால் சொன்னபடி அவர் பணத்தை திருப்பி கொடுக்கவில்ைல. அவர் கொடுத்த காசோலையை வங்கியில் செலுத்திய போது பணம் இல்லை என்று திரும்ப வந்துவிட்டது. இதுகுறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். பிறகு நடிகர் விமல் எங்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் ரூ.3 கோடி தருவதாக எழுத்துப்பூர்வமாக ஒப்புக்கொண்டார். ஆனால் சொன்னபடி ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. எனவே நம்பிக்கை மோசடி மூலம் ரூ.5 கோடி மோசடி செய்த நடிகர் விமல் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தரும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Wimal , Actor Wimal defrauds Rs 5 crore by claiming to produce 'Kalavani-2' under our banner: Filmmaker complains to commissioner's office
× RELATED ‘மன்னர் வகையறா’ படத்தின் மூலம் ரூ.1.73...