×

நிலம் வாங்கி கொடுப்பதாக ரூ.2.90 கோடி மோசடி வழக்கு நடிகர் சூரியிடம் 9 மணிநேரம் தீவிர விசாரணை: முன்னாள் டிஜிபி குடவாலாவுக்கு சம்மன் அனுப்ப முடிவு

சென்னை: நிலம் வாங்கி கொடுப்பதாக கூறி ரூ.2.90 கோடி மோசடி செய்த வழக்கில் நடிகர் சூரியிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இரண்டாவது முறையாக 9 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்தனர். அடுத்தகட்டமாக முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலாவு்க்கு சம்மன் அனுப்பி நேரில் அழைத்து விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். வெண்ணிலா கபடி குழு உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்தவர் சூரி. இவர் விஷ்ணுவுடன் சில படங்களில் இணைந்து நடித்துள்ளார். அப்போது நடிகர் சூரி, அதிக அளவில் நிலங்கள் வாங்க முடிவு செய்துள்ளார். அப்போது, விஷ்ணு தனது தந்தையும், முன்னாள் டிஜிபியுமான ரமேஷ் குடவாலா மூலம் இடம் வாங்கி தருவதாக தெரிவித்துள்ளார்.

அதன்படி, நடிகர் சூரி, முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா மூலம் ரூ.2.90 கோடி பணம் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜனிடம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் சூரிக்கு நிலம் வாங்கி கொடுத்துள்ளனர். ஆனால் அந்த நிலத்துக்கு செல்ல வழியில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் தனக்கு அந்த நிலம் வேண்டாம் என்று நடிகர்  சூரி கூறியுள்ளார். உடனே, வேறு ஒரு இடத்தில் நிலம் வாங்கி தருவதாக அவர்கள் உறுதி அளித்ததாக தெரிகிறது. ஆனால் சொன்னபடி நடிகர் சூரிக்கு நிலம் வாங்கி கொடுக்கவில்லை. இதனால் கொடுத்த பணத்தை கேட்ட போது, சிறிய அளவு பணத்தை மட்டும் கொடுத்து விட்டு மீதமுள்ள ரூ.1.40 கோடியை கொடுக்காமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து நடிகர் சூரி அடையாறு காவல் நிலையத்தில் நடிகர் விஷ்ணு மற்றும் அவரது தந்தை ரமேஷ் குடவாலா உள்ளிட்டோர் மீது புகார் அளித்தார். அப்போது அதிமுக ஆட்சி என்பதாலும், அதேநேரம் முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தியதாக தெரிகிறது. பிறகு நடிகர் சூரி தனது புகார் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், அடையாறு காவல் நிலையத்தில் இருந்து மத்திய குற்றப்பிரிவுக்கு வழக்கை மாற்றி 6 மாதத்தில் விசாரணை நடத்தி அறிக்கையை நீதிமன்றத்தில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவுப்படி விசாரணையை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றி உத்தரவிட்டார். மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் மீனா தலைமையில் நடிகர் சூரி வழக்கு விசாரணை நடந்து வருகிறது. முதல்கட்டமாக கடந்த மார்ச் 28ம் தேதி நடிகர் சூரி வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இந்நிலையில் இரண்டாவது முறையாக நடிகர் சூரி நேற்று முன்தினம் காலை 11.30 மணிக்கு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் மீனா மற்றும் உதவி கமிஷனர் ஜான் விக்டர் ஆகியோர் முன்பு ஆஜரானார். அவரிடம் நிலம் வாங்க கொடுக்கப்பட்ட பணத்தை நேரடியாக யாரிடம் வழங்கினீர்கள்.

ரொக்கமாக ரூ.2.90 கோடி ஒரே தவணையில் வழங்கப்பட்டதா அல்லது காசோலையாக வழங்கப்பட்டதா, மிரட்டியதாக புகார் அளித்துள்ளீர்களே எந்த வகையான மிரட்டல் உங்களுக்கு விடுக்கப்பட்டது. நேரடியாக மிரட்டப்பட்டீர்களா அல்லது யார் மூலம் மிரட்டப்பட்டீர்களா என்பன உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு நடிகர் சூரி அளித்த பதில் வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டது. 9 மணி நேரம் நடந்த விசாரணை இரவு 8.30 மணிக்கு முடந்தது. அப்போது விசாரணைக்கு எப்போது அழைத்தாலும் வரவேண்டும் என்று நடிகர் சூரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  இதையடுத்து ஓரிரு நாளில் முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா, சினிமா தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி விரைவில் விசாரணை மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Tags : Suri ,DGP ,Kudawala , Actor Suri gets 9-hour probe into Rs 2.90 crore fraud case: Ex-DGP decides to summon Kudawala
× RELATED பாமகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்...